Posted in

அமெரிக்காவில் 11 மாதக் குழந்தையை காட்டில் புதைத்த தந்தை

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் தந்தையால் கடத்திச் செல்லப்பட்டு காட்டுப் பகுதியில் உயிருடன் புதைக்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை, காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. லெக்சிங்டன் கவுண்டி பகுதியில் மாயமான கோவா ஷார்ப் என்ற அந்தக் குழந்தை, சுமார் 24 மணி நேரம் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பாட்டி வெளியே சென்றிருந்த நேரத்தில், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை மைக்கேல் கோமர் குழந்தையுடன் அங்கிருந்து மாயமானார். இதனையடுத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், காட்டுப் பகுதியில் மண்ணுக்கும் பைன் இலைகளுக்கும் அடியில் புதைக்கப்பட்டிருந்த நாய் கூண்டு ஒன்றிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கண்டறிந்து தோண்டி எடுத்தனர்.

கூண்டைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருந்த துண்டு காரணமாக உள்ளே காற்று புகுவதற்கு இடைவெளி ஏற்பட்டதால் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம் என்று லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் கூன் தெரிவித்துள்ளார். குழந்தை மீட்கப்பட்டபோது பலமாக அழுது கொண்டிருந்ததாகவும், தற்போது குழந்தை பாதுகாப்பாக இருப்பது தங்களுக்கு நிம்மதி அளிப்பதாகவும் குழந்தையின் உறவினர் ஆம்பர் ஹம்மண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பேட்ஸ்பர்க்-லீஸ்வில் பகுதியில் பதுங்கியிருந்த குழந்தையின் தந்தை மைக்கேல் கோமரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.