போருக்கு தயாராகும் வங்கதேசம்.. யூனுஷ் உத்தரவால் சிட்டகாங்கில் குவிக்கப்படும் பீரங்கி, ஹெலிகாப்டர்

 


டாக்கா: வங்கதேச ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிட்டகாங் நகரில் பீரங்கி, ஹெலிகாப்டர், டேங்குகள் குவித்து வங்கதேசம் ராணுவ போர் பயிற்சி ஒத்திகை செய்வதோடு, அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார். அதோடு நமக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுடன் அவர் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடாக வங்கதேசம் உருவாக நம் நாடு தான் உதவி செய்தது. ஆனால் அதனை மறந்து வங்கதேச இடைக்கால அரசு நம்மை சீண்டி வருவதோடு, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனால் தான் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. வங்கதேசம் தற்போது நம்முடன் வீரியமாக மோதலை தொடங்கி உள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது

வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவால் எளிதாக சமாளிக்க முடியும். ஏனென்றால் நம் நாட்டின் பாதுகாப்பு படையை ஒப்பிடும்போது வங்கதேசத்தின் பாதுகாப்பு படைகள் அளவில் சிறியவை. இதனால் மோதல் அல்லது போர் என்று வந்தால் வங்கதேசத்தை நம் நாடு எளிதாக ஊதித்தள்ளிவிடும். இருப்பினும் தன் பலம் அறியாமல் நம் நாட்டிடம் வங்கதேசம் மோதி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கு எதிரான மோதலுக்கு நடுவே வங்கதேச ராணுவம் புதிய பயிற்சியை தொடங்கி உள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் வங்கதேச ராணுவம் போர் பயிற்சியை தொடங்கி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

 வங்கதேசத்தின் சிட்டகாங்கில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்று முப்படைகளும் இந்த பயிற்சியை தொடங்கி உள்ளன. டாங்கிகள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ராஜ்பரி ராணுவ பயிற்சி பகுதியில் 55 Infantry Division சார்பில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், விமானப்படையின் தலைவர் மார்ஷல் ஷசன் முகமது கான், கடற்படையின் தலைவர் அட்மிரல் நஸ்முல் ஷாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களின் தலைமையில் இந்த போர் பயிற்சி என்பது தொடங்கி உள்ளது. இந்த போர் பயிற்சி என்பது வங்கதேசத்துக்கு தற்போது நிலவும் பதற்றமான நிலையை சமாளிக்கவும், இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தற்போது வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மியான்மர் நாட்டை மையப்படுத்தி செயல்பட்டு வரும் அரக்கன் ஆர்மியால் அந்த நாட்டுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே மோதல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தான் வங்கதேசம் ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. அதோடு வங்கதேசம் தனது ராணுவம் உள்பட முப்படைகளையும் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. 

இதற்காக பிற நாடுகளிடம் இருந்து ஆயுதம் உள்பட ராணுவ தளவாடங்களை வாங்க முடிவு செய்துள்ளது. Forces Goal 2030 என்ற பெயரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ராணுவம் உள்பட முப்படைகளையும் ஆக்டிவ்வாக வைத்து கொள்ளும் முனைப்பில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போர் பயிற்சி என்பது அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

‛‛வங்கதேசம் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதேபோல் போர் என்று வந்தால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒரு விளையாட்டில் வெற்றி பெற பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தான் போரில் வெல்வதற்கும் பயிற்சி என்பது மிகவும் முக்கியம். இதனால் நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்'' என்றார்.


புதியது பழையவை

தொடர்பு படிவம்