இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ளது. தாலிபான்களில் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தவித்து வருகிறது. இந்நிலையில் தான் தாலிபான்களை வீழ்த்த பாகிஸ்தான் தஜிகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்த ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை தொடங்க திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது கடும் மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு போரை தொடங்கி தான் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் முதல் ஆளாக ஆதரித்தது. இப்படி நண்பர்களான ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இப்போது எதிரிகளாக மாறி உள்ளன.
அதாவது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள டிடிபி அமைப்பினர் முகாம்களில் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலில்47 பேர் வரை பலியாகினர். இதில் 20க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளும் பலியாகி உள்ளன. இதனை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் கடுமையாக எதிர்த்து உள்ளன. எங்களின் வான் எல்லைக்குள் நுழைந்து அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தானை தாலிபான்கள் கண்டித்தன. அதோடு டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரமாக இந்த மோதல் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் தாலிபான் அமைப்பினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. பாகிஸ்தான் தாலிபான்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. ஆனால் ஆப்கனை ஆளும் தாலிபான்கள் மவுனம் காத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், ஆப்கானிஸ்தானை பாடம் புகட்டவும், தங்களிடம் மோதும் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்களை குடைச்சல் கொடுக்கவும் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் பாகிஸ்தான் டிசம்பர் மாதம் 30ம் தேதி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அசிம் மாலிக் தஜிகிஸ்தான் சென்று அந்த நாட்டின் அதிபர் எமோமாலி ரஹ்மானுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு என்பது தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பி நகரில் நடந்தது. தஜிகிஸ்தான் என்பது ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாலிபான்களை கடுமையாக எதிர்த்து வரும் நாடாகும்.
இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் தஜிகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச பாதுகாப்பு துறை எக்ஸ்பர்ட் கூறுகையில், ‛‛பாகிஸ்தான், தஜிகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். அவரது ஆட்சியில் இருந்த பல தலைவர்கள் தற்போது தஜிகிஸ்தானில் தான் உள்ளனர்.
குறிப்பாக அஷ்ரப் கனி அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தார். அவர் தற்பாது National Resistance Front (NRF) என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் யார் என்றால் அகமது மசூத். இவர் ஆப்கானிஸ்தான் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது ஷா மசூத்தின் மூத்த மகன் ஆவார். அகமது ஷா மசூத்தை அல்குவைதா பயங்கரவாதிகள் 2001ல் கொன்றனர். அகமது ஷா மசூத், மகன் அகமது மசூத் ஆகியோரை பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால் தற்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாகிஸ்தான் அவரது என்ஆர்எஃப் அமைப்புடன் சேர்ந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
ஏனென்றால் என்ஆர்எஃப் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாலிபான்களை ஆட்சியை வீழ்த்துவது தான். ஆனால் என்ஆர்எஃப் அமைப்புக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் இல்லை. இதனால் அம்ருல்லா சாலேவால் தாலிபான்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படவில்லை. தற்போது பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தானில் இயங்கும் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள் மோதி வருகின்றன. இதனை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் தடுக்கவில்லை.
இது பாகிஸ்தானுக்கு பிரச்சனையாக உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானை பழிவாங்கும் வகையில் அந்த நாட்டில் உள்நாட்டு போரை தொடங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந் உள்நாட்டு போருக்கு அம்ருல்லா சாலேவின் என்ஆர்எஃப் அமைப்பை தஜிகிஸ்தான் உதவியுடன் பாகிஸ்தான் பயன்படுத்த நினைக்கிறது. இதுதவிர தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஈரான், ஐரோப்பாவில் செயல்படுவோரையும் ஒன்றாக இணைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. என்ஆர்எஃப் அமைப்பு என்பது தங்களுக்கு பாகிஸ்தான் உதவி கிடைக்குமா? என்று காத்துள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தானுக்கு பிரச்சனை வந்துள்ளதால் இருவரும் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் தான் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் நஜம் சேதியும் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் தஜிகிஸ்தான் சென்றுள்ளதன் நோக்கம் என்பது தாலிபான்களுக்கு எதிரானது. தஜிகிஸ்தானில் செயல்படும் என்ஆர்எஃப் அமைப்பினரை தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் களமிறக்குவது தான் இதன் நோக்கம். இதற்காக என்ஆர்எஃப் அமைப்பை பலப்படுத்தும் வகையில் உதவி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த சதித்திட்டம் என்பது ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதோடு ஒருவேளை என்ஆர்எஃப் அமைப்பினர் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை தொடங்கும்போது, ஆளும் தாலிபான்களால் டிடிபி அமைப்பினருக்கு ஆதரவு கொடுக்க முடியாது. இதனால் டிடிபி அமைப்பினரால் திறம்பட பாகிஸ்தானை தாக்க முடியாது. அதுமட்டுமின்றி உள்நாட்டு போரில் என்ஆர்எஃப் அமைப்புக்கு எதிராக ஆளும் தாலிபான்களுடன் டிடிபி பாகிஸ்தான் தாலிபான்களும் போரிட வேண்டி இருக்கும். இதன்மூலம் தாங்கள் எளிமையாக தப்பிக்கலாம் என்பதால் தான் இந்த சதித்திட்டத்தை பாகிஸ்தான் தீட்டி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.