கடந்த 2024 டிசம்பர் 4-ம் தேதி, ஹைதராபாத் சிக்கடபள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதைக் காண இரவு 9:30 மணியளவில் நடிகர் அல்லு அர்ஜுன் அங்கு வருகை தந்தபோது, அவரைக் காண ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர். இந்த திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது 13 வயது மகன் ஸ்ரீ தேஜஸ் பலத்த காயமடைந்து நீண்ட சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கில் சுமார் ஒரு வருட கால விசாரணைக்குப் பிறகு, நம்பள்ளியில் உள்ள கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் மொத்தம் 23 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், நடிகர் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாக (A11) சேர்க்கப்பட்டுள்ளார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் திரையரங்கிற்கு வந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணம் எனப் போலீசார் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், உரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யத் தவறிய சந்தியா திரையரங்க நிர்வாகம் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சேர்க்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் மற்றும் மேலாளர்கள் பெயரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பு சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. 'புஷ்பா 2' திரைப்படம் வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனை படைத்திருந்தாலும், பட வெளியீட்டின் போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குத் தேவையான இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்குவது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
