டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:
சில தினங்களுக்கு முன்னர் கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்தே தேவானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் (பிணை) வழங்கக் காவல்துறை மறுத்துள்ள நிலையில், தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது மேலும் மூன்று துப்பாக்கிகள் தொடர்பாகப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராணுவத்தால் அவருக்கு மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்பது குறித்த விவரத்தைக் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முதலில் ஒரு துப்பாக்கி தொடர்பாகத் தொடங்கிய விசாரணை, தற்போது மற்ற மூன்று துப்பாக்கிகள் எங்கே? என்பது குறித்துத் தீவிரமடைந்துள்ளது. தற்போது தேவானந்தாவிடம் ஒரு துப்பாக்கி கூடக் கையிருப்பில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதேவேளையில், தனது துப்பாக்கிகள் காணாமல் போனது குறித்து அவர் எந்தவொரு முறைப்பாட்டையும் (புகார்) செய்யவில்லை. இதனால் துப்பாக்கிகள் தொலைந்துவிட்டன என்று அவர் வாதிட முடியாது. எனவே, இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தேவானந்தாவின் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் அவரது துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொலை செய்த நபர் வேறொருவராக இருந்தாலும், அதற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியவரும் சட்டப்படி குற்றவாளியே ஆவார். இந்தக் குற்றமானது ஒரு கொலைக்குச் சமமான குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தத் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தேவானந்தா தனது எஞ்சிய வாழ்நாளைச் சிறையிலேயே கழிக்க நேரிடும். இந்த வழக்கை இவ்வளவு துல்லியமாக ஆதாரங்களுடன் நகர்த்தி, அவரைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தது யார் என்பதுதான் தற்போது புரியாத புதிராக உள்ளது.
