இலங்கையில் வீசிய 'டித்வா' புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில், கண்டி மாவட்டம் ஹசலக நகரைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு முற்றிலும் தகுதியற்ற இடங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் நிலப்பரப்பு சுமார் 40 அடி ஆழத்திற்கு உள்வாங்கி இடிந்து விழுந்ததால், எப்போது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால் உடத்தாவ, நெலும் மாலை, கல நாக, மட கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இயற்கைச் சீற்றத்தில் உடத்தாவ கிராமம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 12-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டன. இதுவரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் 40 அடி ஆழத்தில் வீடுகள் புதைந்துள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது தெரியாததால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
புயல் ஓய்ந்த பின்பும் நிலப்பரப்பு நிலையற்றதாக இருப்பதால், பாதுகாப்பற்ற அந்த ஐந்து கிராமங்களுக்கும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
