விமான நிலையத்தில் விஜய் இறங்கியதும், மலேசிய அதிகாரிகள் அவரை VIP நபர்கள் செல்லும் வழியாக கொண்டு சென்று, இமிகிரேஷனை முடிக்க, ஆயுதம் ஏந்திய பொலிசார் பாதுகாப்பு கொடுக்க, விஜய் வெளியே வந்தார். மலேசிய , சீன, மற்றும் வேற்றின மக்கள் அனைவரும் விஜயை பார்த்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மலேசிய விமான நிலையமே சும்மா அதிர்ந்தது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றடைந்தார். தனது கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அவர் தனி விமானம் மூலம் அங்கு சென்றார். சுபாங் ஸ்கைபார்க் விமான நிலையத்தில் தரையிறங்கிய விஜய்க்கு, மலேசிய நாட்டு பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் மற்றும் நாட்டுப்புற நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள புகழ்மிக்க புகித் ஜலீல் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் நாளை (டிசம்பர் 27) இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சுமார் 85,000 ரசிகர்கள் அமரக்கூடிய இந்த மைதானம் முழுவதும் 'தளபதி' ரசிகர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு சுமார் 30 பாடகர்கள் பங்கேற்கும் 'தளபதி திருவிழா' என்ற இசை கச்சேரியும், அதனைத் தொடர்ந்து அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மலேசியாவில் இதுவரை ஒரு இந்தியப் படத்திற்கு இல்லாத அளவிற்குக் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்பதால், அந்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த விழாவில் ஒரு சுவாரஸ்யமான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது முழுநேர அரசியலில் இறங்கியுள்ளதால், மலேசிய அரசு இந்த விழாவை ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டுமே நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, மேடையில் எவ்வித அரசியல் கருத்துக்களையோ அல்லது கட்சி சார்ந்த சின்னங்களையோ பயன்படுத்தக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்குச் செல்லும் முன் தனது ரசிகர்களுக்கு அவர் கொடுக்கப் போகும் 'கடைசி உரை' என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
மலேசியாவுக்கு விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் எச்.வினோத் மற்றும் படக்குழுவினர் மட்டுமல்லாது, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான அட்லீ, நெல்சன் திலீப்குமார் மற்றும் பிரபுதேவா ஆகியோரும் ஏற்கனவே அங்கு சென்றடைந்துள்ளனர். 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த ஆடியோ லான்ச் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உலகத் தமிழர்களிடையே உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
