போர் ஆரம்பமா ? சீனாவின் போர் கப்பல்கள் தைவான் நாட்டு கடல் எல்லையில் !

 


தைவான் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை நிலவரப்படி, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த (PLA) 13 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பல்கள் தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 12 விமானங்கள் தைவான் நீரிணையின் மையக் கோட்டைத் (Median Line) தாண்டி, அந்நாட்டின் வடக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த ஊடுருவலைத் தொடர்ந்து, தைவான் தனது போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கடலோர ஏவுகணை அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்துச் சீனப் படைகளைக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஆயுதமேந்திய மோதல் வெடிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கும் நிலையில், "நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம், எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தப் பதற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, அமெரிக்கா சமீபத்தில் தைவானுக்கு அறிவித்துள்ள சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஆயுத விற்பனைத் திட்டமாகும். அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தால், தைவானுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய ஆயுதத் தொகுப்பாக இது அமையும். இதனால் ஆத்திரமடைந்த சீனா, நார்த்ரோப் க்ரம்மன் (Northrop Grumman), போயிங் (Boeing) மற்றும் எல்3 ஹாரிஸ் (L3Harris) உள்ளிட்ட 20 அமெரிக்கத் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்கள் மீது அதிரடித் தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் சீனாவில் முடக்கப்பட்டுள்ளன.

"தைவான் விவகாரம் சீனாவின் மிக முக்கியமான நலன்களின் மையப்புள்ளி; இது அமெரிக்கா தாண்டக்கூடாத சிவப்புக் கோடு" என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தியும் அதைக் கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறது. தைவானுக்கு ஆயுதம் வழங்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபர் அதற்கான விலையைத் தர நேரிடும் என்றும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இதன் விளைவாக, ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

Post a Comment (0)
Previous Post Next Post