இலங்கை முல்லைத்தீவு பகுதியில் 12 வயது சிறுமி உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 21-ஆம் தேதி சிலாவத்தை பகுதியில் உடல்நலம் குன்றிய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று நடைபெற்ற அந்தச் சிறுமியின் இறுதிக் கிரியையில், அவர் பயின்ற பாடசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டபோது, தனது பாசத்திற்குரிய தோழியின் சடலத்தைத் தாங்கிய பேழையை சக மாணவிகளே கண்ணீருடன் சுமந்து சென்ற காட்சி காண்போர் நெஞ்சை உருக்கியது.
சிறுமியின் உயிரிழப்பில் தங்களுக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறும் அவர்கள், இதற்கு நீதி வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உமா சங்கர் இதுபற்றிக் கூறுகையில், "சிறுமியின் உயிரிழப்பு குறித்து எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இறப்பிற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உயிரிழப்பின் பின்னணியை ஆராய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் வெள்ளிக்கிழமை தனது விசாரணையை முறைப்படி தொடங்கவுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு மருத்துவ அலட்சியம் காரணமா அல்லது உணவு ஒவ்வாமை உயிருக்கு உலை வைத்ததா என்பது இந்த விசாரணை அறிக்கையின் முடிவில்தான் தெரியவரும்.
