திரும்பவும் தாக்குவோம் அமெரிக்கா நைஜீரிய ISISக்கு கடும் எச்சரிக்கை !

US vows to launch more strikes on ISIS targets in Nigeria


அமெரிக்காவின் அதிநவீன சக்திவாய்ந்த போர்க்கப்பல் ஒன்று, நைஜீரியா நாட்டுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து லேசர் கதிர்கள் மூலம் இலக்கைக் கண்டறிந்து துல்லியமாகத் தாக்கவல்ல ஏவுகணைகளை அமெரிக்கா ஏவி வருகிறது. இந்த நூற்றாண்டில் போர் தந்திரங்கள் எந்த அளவிற்கு மாறியுள்ளன என்பதற்கு இதுவே சாட்சி. கடலில் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு, போர்க்கப்பலில் இருந்து முதலில் ஆளில்லா விமானங்களை (Drones) அமெரிக்கா ஏவுகிறது.

இந்த ஆளில்லா விமானங்கள் வான்பரப்பில் வட்டமிட்டு, ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளின் நிலைகள், முகாம்கள் மற்றும் வாகனங்களை அடையாளம் காண்கின்றன. இலக்கு உறுதியானதும், அந்த ட்ரோன்கள் குறிப்பிட்ட இடத்தின் மீது மிகவும் சக்திவாய்ந்த லேசர் கதிர்களைப் பாய்ச்சுகின்றன. இதுவே தாக்குதலுக்கான அடையாளமாக மாறுகிறது. உடனே போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், லேசர் கதிர்கள் விழுந்துள்ள அந்தப் புள்ளியைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சென்று வெடிக்கின்றன.

இந்தத் நவீனத் தாக்குதலால் நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயுள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது முக்கியத் தலைவர்கள் பயணித்த வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இதுதான்; "நோகாமல் நொங்கு எடுப்பது" என்பதற்கு ஏற்ப, அமெரிக்கப் படைகள் நைஜீரிய மண்ணில் கால் பதிக்காமலேயே பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகின்றன.

30 ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்க வீரர்கள் நேரடியாகக் களமிறங்க வேண்டியிருந்திருக்கும். அதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று, யாரிடம் அதீத தொழில்நுட்பம் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர் என்ற நிலை உருவாகியுள்ளது. இதே போன்ற ஒரு நிலைதான் உக்ரைன் போரிலும் நீடிக்கிறது. அமெரிக்கா வழங்கியுள்ள நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காரணமாக, ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் வான்பரப்பிற்குள் நுழையவே அஞ்சுகின்றன.

Post a Comment

Previous Post Next Post