Hertfordshire காவல் துறையில் பணியாற்றி வந்த கிறிஸ்டோபர் கெல்லி என்ற அதிகாரி, சக பெண் அதிகாரிகளிடம் மிக மோசமான முறையில் நடந்துகொண்டதற்காகப் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தன்னைத் தானே "கிறிஸ் காசனோவா" (Chris Casanova) மற்றும் "டேஞ்சர்" (Danger) என்று அழைத்துக்கொண்ட இந்த அதிகாரி, பெண் காவலர்களின் உடல் தோற்றம் குறித்து ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் வர்ணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு பயிற்சி வகுப்பின் போது, வேறொரு பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரைப் பார்த்து "அவருக்கு உடல் வாகு அருமையாக இருக்கிறது, ஆனால் முகம் அழகில்லை" என்று சக ஊழியர்களிடம் கூறியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் அளித்த புகாரில், கெல்லியின் அத்துமீறல்கள் அடுக்கடுக்காக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'பிளீப் டெஸ்ட்' (Bleep Test) எனப்படும் உடற்தகுதி தேர்வின் போது, வேண்டுமென்றே பெண் அதிகாரிகளுக்கு நேர் எதிரே நின்று கொண்டு அவர்களின் உடலை உற்று நோக்குவது, காருக்குள் அமர்ந்திருக்கும் பெண் அதிகாரிகளின் அந்தரங்க உறுப்புகளை வெறித்துப் பார்ப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு பெண் அதிகாரி, கெல்லி அங்கு இருப்பார் என்ற பயத்திலேயே தனது உடற்தகுதி தேர்விற்குச் செல்லாமல் தவிர்த்ததுடன், வேலைக்கே வரப்பிடிக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
கெல்லியின் வரம்பு மீறிய பேச்சுக்கள் இதோடு நிற்கவில்லை. சக பெண் அதிகாரி ஒருவரை சினிமாவுக்கு அழைத்த அவர், "பாப்கார்ன் எனது மடியில் இருக்கும் வரை நீ அதைப் பகிர்ந்து கொள்ளலாம்" என்று ஆபாசமாகப் பேசியுள்ளார். மற்றொரு பெண்ணிடம், "உனக்கு மற்ற விஷயங்களிலும் (உடலுறவில்) ஸ்டாமினா அதிகமாக இருக்கும், உன்னால் பல மணிநேரம் தாக்குப் பிடிக்க முடியும்" என்று முகம் சுளிக்க வைக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், பெண் அதிகாரிகளின் கால்கள் குண்டாக இருக்கிறது என்றும், ஒருவரை "பத்தில பத்து மார்க்" (10 out of 10) என்றும் மதிப்பெண் போட்டு வர்ணிப்பதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
விசாரணை குழுவின் முன் ஆஜரான கெல்லி, தான் பயன்படுத்திய வார்த்தைகளை ஒப்புக்கொண்டாலும், அவை அனைத்தும் "ஜாலிக்காகச் சொல்லப்பட்டவை" என்றும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் மழுப்பினார். பாப்கார்ன் மற்றும் ஸ்டாமினா குறித்த கருத்துக்கள் பாலியல் ரீதியானவை அல்ல என்று அவர் வாதிட்ட போதிலும், அவற்றை விசாரணை குழு ஏற்கவில்லை. ஒரு காவல் அதிகாரிக்கான கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும், பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியதாலும், அவர் தார்மீக அடிப்படையில் அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்று கூறி அவரைப் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
