பெங்களூருவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி தேனிலவுக்காக இலங்கைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட மோதல், இரண்டு உயிர்களைப் பறித்ததோடு இரண்டு குடும்பங்களையும் நிலைகுலையச் செய்துள்ள துயரச் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் இதோ:
பெங்களூருவின் வித்யாரண்யபுராவைச் சேர்ந்த சூரஜ் (35) மற்றும் எம்பிஏ பட்டதாரியான கானவி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 29-ம் தேதி பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. உறவினர்களின் வற்புறுத்தலால் இந்தத் திருமணத்திற்கு கானவி சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, 10 நாள் தேனிலவுப் பயணமாக இருவரும் இலங்கைக்குச் சென்றனர். ஆனால், அங்கு சென்ற சில நாட்களிலேயே கானவியின் திருமணத்திற்கு முந்தைய நட்பு மற்றும் பழைய காதல் விவகாரம் குறித்துப் பேச்சு எழுந்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறினால் தேனிலவுப் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 5 நாட்களிலேயே இருவரும் பெங்களூரு திரும்பினர். நாடு திரும்பிய பிறகும் இரு வீட்டாருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனால் மனமுடைந்த கானவி, கடந்த புதன்கிழமை அன்று தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்டார். கானவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் சூரஜ் மற்றும் அவரது உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமை மற்றும் த*கொலைக்குத் தூண்டியதாக பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கானவியின் மரணத்தைத் தொடர்ந்து, சூரஜின் வீட்டின் முன் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சூரஜ், தனது தாய் ஜெயந்தி மற்றும் சகோதரருடன் பெங்களூருவை விட்டு வெளியேறினார். ஹைதராபாத் வழியாகச் சென்ற அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினர். அங்கு சனிக்கிழமை அதிகாலை, சூரஜ் தனது ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்டார்.
தன் மகன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜெயந்தியும் அதே ஹோட்டல் அறையில் த*கொலைக்கு முயன்றார். நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். தற்போது அவர் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து நாக்பூர் மற்றும் பெங்களூரு காவல்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய மனக்கசப்பு மற்றும் பழைய விஷயங்களைப் பற்றிய விவாதம், அழகான ஒரு வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய தம்பதியின் முடிவாக அமைந்தது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் த*கொலை தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது த*கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், உதவி மையங்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
