ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனரும், இந்தியாவின் முன்னணித் தொழில்முனைவோருமான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் இடையிலான விவாகரத்து வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விவாகரத்து வழக்கு: ஸ்ரீதர் வேம்பு ரூ. 15,288 கோடி பிணைப்பத்திரம் தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஆகியோருக்கு இடையிலான விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரமிளாவின் சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்ரீதர் வேம்பு 1.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,288 கோடி) மதிப்பிலான பிணைப்பத்திரத்தை (Bond) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீதர் வேம்பு தனது பெரும்பாலான பங்குகளை ரகசியமாகத் தனது குடும்பத்தினருக்கு மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த உத்தரவு வந்துள்ளது.
கலிபோர்னியா சட்டத்தின்படி, திருமண உறவில் இருக்கும்போது ஈட்டப்படும் சொத்துக்கள் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்ரீதர் வேம்பு 2020-இல் இந்தியா திரும்பிய பிறகு, ஜோஹோ நிறுவனத்தில் தனக்கிருந்த 83 சதவீதப் பங்குகளைத் தனது சகோதரி மற்றும் அவரது கணவர் பெயருக்கு மாற்றியதாகவும், தற்போது அவரிடம் வெறும் 5 சதவீதப் பங்குகள் மட்டுமே இருப்பதாகவும் பிரமிளா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. விவாகரத்து நேரத்தில் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதைத் தவிர்க்கவே திட்டமிட்டு இந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன்-மனைவிக்குச் சொந்தமான கூட்டுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் ஸ்ரீதர் வேம்பு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனைவிக்குச் சேர வேண்டிய நியாயமான சொத்துப் பங்குகளைத் தடுக்கும் வகையில் இந்தச் சொத்துப் பரிமாற்றங்கள் அமைந்துள்ளதாக நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது. இதனால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை பிரமிளாவின் பொருளாதார நலனை உறுதி செய்ய இந்த மிகப் பெரிய தொகையைப் பிணைப்பத்திரமாகச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருகிறார். தான் தனது மனைவியையோ அல்லது ஆட்டிசம் பாதிப்புள்ள தனது மகனையோ நிதி ரீதியாகக் கைவிடவில்லை என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனம் இந்தியாவில் தழைத்தோங்கியதால் அதன் உரிரிமைப் பங்குகள் முறைப்படிப் பகிரப்பட்டதாகவும், இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பிணையாகக் கேட்டிருப்பது கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
