Ads Top

ஈரான் மீது 'நெருப்பு மழை' பொழியத் தயார்: லண்டன் RAF படைத் தளத்திலிருந்து அமெரிக்க B1 போர் விமானங்கள் அதிரடிப் புறப்பாடு

ஈரான் மீதான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) விமானப்படைத் தளத்திலிருந்து அமெரிக்காவின் அதிநவீன பி-1பி லான்சர் (B-1B Lancer) போர் விமானங்கள் இன்று ஈரான் நோக்கிப் புறப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக 'மரண அடி, நெருப்பு மற்றும் ஆக்ரோஷம்' (Death, Fire, and Fury) எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த விமானங்கள் தாக்குதலுக்குத் தயாராகியுள்ளன. இந்தத் தளத்தில் சுமார் 11 பி-1 வகை போர் விமானங்களும், 3 பி-52 வகை விமானங்களும் குவிக்கப்பட்டுள்ளன, இது ஈரானுக்கு எதிரான ஒரு பாரிய வான்வழித் தாக்குதலின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை முற்றிலும் அழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) திட்டத்தின் கீழ், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), இன்று ஈரானுக்கு மிகக் கடுமையான நாளாக அமையும் என்று எச்சரித்துள்ளார். "இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான விமானங்கள் மற்றும் குண்டுகளைக் கொண்டு ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைக்கப் போகிறோம்" என்று அவர் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த பி-1பி லான்சர் விமானங்கள் சுமார் 34,000 கிலோ வெடிமருந்துகளைச் சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் மற்றும் ஆன்மீகத் தலைமைக்கு எதிராக ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்க அதிபரை 'அழிப்போம்' (Elimination) எனத் மிரட்டியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அந்த நாடு மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு 20 மடங்கு கடுமையான தாக்குதலை நடத்துவோம் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), ஆரம்பத்தில் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்திருந்தாலும், சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானங்கள் லண்டனிலிருந்து செயல்படப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். லண்டனிலிருந்து ஈரான் சுமார் 4,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், அமெரிக்காவிலிருந்து நேரடியாகச் சென்று தாக்குவதை விட இது சுலபமானது என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடித் தாக்குதல்கள் மூலம் ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களை அடுத்த சில நாட்களுக்குள் முற்றிலும் முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.