15 வயது பணிப்பெண்ணை வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்த இலங்கை நபர் !


இலங்கையின் கல்முனைப் பகுதியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இரவு, அந்த வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 37 வயதுடைய நபர் ஒருவர் அச்சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மலையகப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், வறுமை காரணமாக வீட்டுப்பணிக்கு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரம் குறித்து கடந்த ஜனவரி 18-ஆம் தேதி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கல்முனை தலைமையகப் போலீஸார் அதிரடி விசாரணையில் இறங்கினர். சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த 37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையுடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான தனிப்படை இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. 

மலையகப் பகுதிகளில் இருந்து கல்வி கற்க வேண்டிய வயதில் வீட்டுப்பணிக்கு அனுப்பப்படும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Contact Form