விஜய்க்கு 'ரிப்பீட்' சம்மன்: 19ம் திகதி மீண்டும் டெல்லி வர உத்தரவு - பழிவாங்கும் படலம் 2.0


 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஒரு கை பார்ப்பது என்று டெல்லி சிபிஐ முடிவு செய்துவிட்டதோ என்ற சந்தேகம் இப்போது வலுவாக எழுந்துள்ளது. நேற்று (ஜனவரி 12) சுமார் 7 மணி நேரம் டெல்லியில் வைத்துத் துருவித் துருவி விசாரணை நடத்திய சிபிஐ, அவர் சென்னை வந்து இறங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் வரும் ஜனவரி 19-ம் தேதி ஆஜராகும்படி அடுத்த சம்மனைத் தட்டிவிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விஜய் தனது அரசியல் பயணத்தை வேகம் எடுத்திருக்கும் நிலையில், அவருக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போடுவது திட்டமிட்ட ஒரு நெருக்கடியோ என்று அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

முன்னதாக, விஜய்யின் ஜன நாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல் இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று நிற்கிறது. இந்தியத் திரை வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய முட்டுக்கட்டை போடப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். 

கரூர் விபத்து நடந்தபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக அழைத்து ஆறுதல் கூறியது ஒரு 'நட்பு' நாடகம் என்றும், விஜய் தங்களது கூட்டணிக்கு வரமாட்டார் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரே, மத்திய அரசு தனது 'விஸ்வரூப' பழிவாங்கும் படலத்தைத் தொடங்கிவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், மத்திய அரசுக்குத் தமிழக மாநில அரசும் மறைமுகமாகத் துணை போகிறது என்பதுதான். "திமுகவும் பாஜகவும் சும்மா வெளிப்பார்வைக்குத் தான் முட்டி மோதிப்பாங்க, ஆனா உள்ளுக்குள்ள ரெண்டு பேரும் 'திக்கஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்' (Thickest Friends)" என்று விஜய் தனது மேடைகளில் சொன்னது இப்போது அச்சுப்பிசகாமல் உண்மையாகி வருவதைக் காண முடிகிறது. 

விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்க இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து 'செக்' வைக்கின்றனவோ என்ற பேச்சு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யைச் சுற்றிப் பின்னப்படும் இந்தச் சதி வலைகள், அவரது தொண்டர்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லிக்கு மீண்டும் விசாரணைக்குச் செல்வது ஒருபுறம் இருந்தாலும், அடுத்தடுத்து வரும் இந்தத் தடைகளைத் தகர்த்து அவர் எப்படித் தேர்தல் களத்தைச் சந்திக்கப் போகிறார் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி. 'தளபதி' ஒரு பக்கம் சிபிஐ-யைச் சமாளிப்பாரா ? அல்லது ரிலீஸ் ஆகாத படத்தைச் சமாளிப்பாரா? எதுவானாலும் ஜனவரி 19-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய 'வெடி' காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Post a Comment

Previous Post Next Post