Ads Top

கல்லூரி வளாகத்தில் காவலாளி குடும்பமே கூண்டோடு அழிப்பு - 2 வயது குழந்தை உட்பட 3 பேர் கொடூரக் கொலை!


 சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் அரங்கேறியுள்ள இந்த வெறிச்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார், தனது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது குழந்தையுடன் பிழைப்பு தேடி சென்னை வந்துள்ளார். தரமணியில் உள்ள கல்லூரியில் காவலாளியாகச் சேர்ந்து அங்கேயே தங்கியிருந்த அந்த ஏழைக் குடும்பத்தை, போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் சிதைத்துள்ளது. முதலில் கவுரவ் குமாரை வெட்டிச் சாய்த்த அந்தக் கும்பல், அவரது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன், பச்சிளம் குழந்தையையும் விட்டுவைக்காமல் தீர்த்துக்கட்டியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. அடையாறு பகுதியில் ஒரு சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பயங்கர வெட்டுக்காயங்களுடன் கவுரவ் குமாரின் உடல் கிடந்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்து சடலத்தை வீசிச் சென்றது உறுதியானது. கவுரவ் குமாரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு போன் நம்பரை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தரமணி கல்லூரி காவலாளி என்பது தெரியவந்தது.

காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கவுரவ் குமாரின் நண்பர் உட்பட 7 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமானது. கவுரவ் குமாரின் மனைவி மற்றும் 2 வயது குழந்தையையும் கொன்று மறைத்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அவர்களின் தகவலின் அடிப்படையில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் 2 வயது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முனிதா குமாரியின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கல்லூரி போன்ற பாதுகாப்பான வளாகத்திற்குள், ஒரு குடும்பத்தையே போதை கும்பல் வேட்டையாடியிருப்பது பெரும் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துகிறது. போதையில் இருந்த 5 பேர் கொண்ட அந்தக் கும்பல், இரக்கமே இன்றி இந்தக் கொலைகளைச் செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் சென்னையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கொடூரக் கொலையில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



No comments:

Powered by Blogger.