ராமதாஸின் மாஸ்டர் பிளான்! விஜய்யுடன் கைகோர்க்கும் 'ஐயா' - அன்புமணியையும் திருமாவையும் ஒரே கல்லில் வீழ்த்த வியூகம்!
பாமக-வில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் நின்றதால், அவர் முந்திக்கொண்டு அதிமுக கூட்டணியில் கௌரவமான இடத்தைப் பிடித்துவிட்டார். இதனால் தனித்து விடப்பட்ட ராமதாஸ், திமுக பக்கம் சாய முயன்றார். ஆனால், அங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்ததால், அந்த வாய்ப்பும் ராமதாஸுக்கு நழுவிப் போனது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராமதாஸ், இப்போது தனது சொந்த மகனையும், அரசியல் எதிரி திருமாவையும் ஒரே நேரத்தில் வீழ்த்த ஒரு மெகா திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இருக்கும் அபரிமிதமான செல்வாக்கை ராமதாஸ் தனது துருப்புச் சீட்டாகக் கருதுகிறார். கடந்த சில தினங்களாகத் தனது தீவிர ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ், "விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும், தனது அரசியல் அனுபவமும் இணைந்தால் வட மாவட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என நம்புகிறார். விஜய்யுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பாமக-வின் உண்மையான பலம் யாரிடம் இருக்கிறது என்பதை அன்புமணிக்கு நிரூபிக்கவும், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் செல்வாக்கைக் குறைக்கவும் ராமதாஸ் கணக்குப் போட்டுள்ளார்.
தற்போது ஒரு தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தவெக தரப்பு, ராமதாஸ் தரப்புடனும் கூட்டணி, தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து ரகசியமாகப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மாவட்டங்களில் பாமக-வுக்கு இருக்கும் நிலையான வாக்கு வங்கியும், விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் இணைந்தால் அது மற்ற கூட்டணிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வன்னியர் சமூக மக்கள் இப்போதும் ராமதாஸ் மீது வைத்திருக்கும் மதிப்பைப் பயன்படுத்தி, வட தமிழகத்தில் வெற்றிக்கொடியை நாட்ட விஜய் தரப்பும் ஆர்வம் காட்டி வருகிறது.
"பாமக என்றாலே அது ராமதாஸ் தான்" என்பதை மீண்டும் நிலைநாட்டத் துடிக்கும் ஐயா தரப்பு, விஜய்யுடன் கைகோர்ப்பதை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே பார்க்கிறது. இந்தப் புதிய கூட்டணி அமைந்தால், அது அதிமுக-வில் இருக்கும் அன்புமணியையும், திமுக-வில் இருக்கும் திருமாவளவனையும் ஒரே நேரத்தில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் அரசியல் அறிமுகத்திற்கு ஒரு வலுவான அஸ்திவாரமாக இந்த ராமதாஸின் ஆதரவு இருக்குமா அல்லது இது மற்றொரு அரசியல் சதுரங்க ஆட்டமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments: