லண்டன் மற்றும் புறநகர் பகுதிகளில் கடை வைத்திருக்கும் தமிழர்களே ஜாக்கிரதை. நீங்கள் நடத்தும் கடைக்கு உள்ளே, சுங்க அதிகாரிகளோடு போலீசாரும் இணைந்து வந்து, நீங்கள் வைத்திருக்கும் சிகரெட்டை பரிசோதனை செய்ய உள்ளார்கள். காரணம், 2024 முதல் 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 2 பில்லியன் (£2 Billion) பவுண்டுகளை அரசு இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு உள்ளே முன்னெப்பொழுதும் இல்லாத அளவு, போலியான சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சீனா, தைவான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து கன்டெய்னர்களில் இந்த சிகரெட்டுகள் வருவதாகவும், அவை அச்சு அசலாக நீங்கள் விற்கும் B&H, Silk Cut, Marlboro போன்ற சிகரெட்டுகளை ஒத்து இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள பெரிய ஒரு கடத்தல் கும்பல் ஒன்று, இதனை மிகவும் நேர்த்தியாகச் செய்து வருவதாகவும், மிகப்பெரிய நெட்வொர்க்கில் இது இயங்கி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ள நிலையில், போலீசாரையும் சுங்க அதிகாரிகளையும் தடாலடியாகக் கடைகளுக்கு அனுப்பி, போலி சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்வதோடு கடுமையான அபராதத்தையும் விதிப்பது என அரசு தீர்மானித்துள்ளது. எனவே, எல்லாக் கடைகளுக்கும் செல்ல முடியாவிட்டாலும், பல இடங்களில் போலீசார் சென்று சோதனை நடத்த வாய்ப்புகள் உள்ளன.
சில நேரங்களில் உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் இந்த போலி சிகரெட்டுகளை வாங்கி வைத்திருக்கக்கூடும். எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மேலும், உங்கள் வாடிக்கையாளர் யாராவது வந்து, தான் வாங்கிய சிகரெட் நல்லதல்ல, அதில் மாற்றம் இருக்கிறது என்று சொன்னால் உடனே உஷாராவது நல்லது. எங்கோ பிழை இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். இந்தச் செய்தியைக் கடை வைத்திருக்கும் எமது தமிழ் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும்.
