அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானா போன்ற விவசாய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தியாவின் இந்த 30% வரிவிதிப்பால் அந்த மாநில விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கவலையடைந்த அமெரிக்க செனட்டர்கள் கெவின் கிராமர் மற்றும் ஸ்டீவ் டெய்ன்ஸ் ஆகியோர், "இந்தியாவுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திற்கும் முன்பாக, நமது பருப்பு வகைகளுக்கான வரியை நீக்க ட்ரம்ப் வலியுறுத்த வேண்டும்" எனக் கடிதம் எழுதியுள்ளனர். உலகிலேயே 27% பருப்பு வகைகளை நுகரும் மிகப்பெரிய நாடாக இந்தியா இருப்பதால், இந்தச் சந்தையை இழக்க அமெரிக்கா விரும்பவில்லை.
மறுபுறம், அதிபர் ட்ரம்ப் தனது பிடிவாதத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்காவுடன் முறையான வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகள் மீது 50% வரியைச் சுமத்தியுள்ள ட்ரம்ப், இந்தியா போன்ற நாடுகள் உடனடியாகத் தனது நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை என்றால் இந்த வரியை 500% வரை உயர்த்தவும் தயங்க மாட்டார் என அமெரிக்க எம்.பி. லிண்ட்சே கிரஹாம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாமல் தனது உள்நாட்டு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளது. ட்ரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கைக்குப் போட்டியாக இந்தியாவின் இந்த அதிரடிப் பதில், சர்வதேச அளவில் ஒரு பெரிய பொருளாதாரப் போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஒரு சுமுகமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், பருப்பு முதல் பெட்ரோல் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் இரு நாடுகளிலும் எகிற வாய்ப்புள்ளது.
