இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 'ரன் மெஷின்' ரெடியாகிவிட்டார்! ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 2026, U19 உலகக் கோப்பைத் தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விஸ்வரூபம் எடுத்துள்ளார். வெறும் 14 வயதே ஆன இந்தச் சிறுவன், வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 67 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும் 3 மெகா சிக்ஸர்களும் அடக்கம். இந்தப் பேட்டிங் மூலம் அவர் இந்திய ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே 15 வயதைக் கடப்பதற்கு முன்னரே அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார். சரியாகச் சொன்னால், 14 வயது மற்றும் 296 நாட்களில் அரைசதம் கடந்து, உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளம் வயதில் 50 ரன்களை எட்டிய வீரர் என்ற பிரம்மாண்ட உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். வைபவ்வின் இந்த அசுர வேக ஆட்டம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையைத் தகர்த்து எறிந்துள்ளது.
யு-19 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி வைபவ் முன்னேறியுள்ளார். விராட் கோலி 28 போட்டிகளில் விளையாடி 978 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் வைபவ், தனது 20-வது போட்டியிலேயே 1000 ரன்களைக் கடந்து, தற்போது 1047 ரன்களுடன் கோலியை ஓரம் கட்டியுள்ளார். அடுத்து சர்பராஸ் கானின் (1080 ரன்கள்) சாதனையை முறியடிக்க வைபவ்க்கு இன்னும் வெறும் 33 ரன்கள் மட்டுமே தேவை. இந்தத் தொடரிலேயே அந்தச் சாதனையும் முறியடிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில், சுப்மன் கில் மற்றும் உன்முக் சந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக வைபவ் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் யு-19 ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய 7-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே, உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் மிக இளைய வீரர் என்ற முத்திரையைப் பதித்த வைபவ், இப்போது ரன்களையும் குவித்து மலைக்க வைத்து வருகிறார்.
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா 39 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் தடைப்பட்டாலும், வைபவ் சூர்யவன்ஷி செய்த சாதனைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. "குட்டி விராட் கோலி" என ரசிகர்களால் கொண்டாடப்படும் வைபவ், எதிர்காலத்தில் இந்திய சீனியர் அணியிலும் பல சாதனைகளைப் படைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
