உலக நாடுகளுக்கிடையே விண்வெளியைக் கைப்பற்றுவதில் நிலவி வரும் போட்டி, இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டனின் ஸ்டார்லிங்க் (SpaceX Starlink) நிறுவனத்திற்குப் போட்டியாக, சீனா சுமார் 2 லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்திடம் (ITU) அனுமதி கோரியுள்ளது. CTC-1 மற்றும் CTC-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு மெகா திட்டங்களின் மூலம், தலா 96,714 செயற்கைக்கோள்களை 3,660 சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இது தற்போது விண்ணில் உள்ள மொத்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் ஒரு தந்திரமான அரசியல் ஒளிந்திருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உண்மையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதை விட, விண்வெளியில் உள்ள குறிப்பிட்ட 'சுற்றுப்பாதைகளை' (Orbital Slots) முன்கூட்டியே தங்களுக்கு எனப் பதிவு செய்துகொள்ளும் ஒரு 'நில ஆக்கிரமிப்பு' (Land Grab) முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. சர்வதேச விதிகளின்படி, முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால், மற்ற நாடுகள் அதே பாதையைப் பயன்படுத்த முடியாமல் தடுப்பதே சீனாவின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், 2 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. சீனா கடந்த 2025-ஆம் ஆண்டில் 92 ராக்கெட்டுகளை ஏவி சாதனை படைத்திருந்தாலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வாரத்திற்கு 500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவ வேண்டியிருக்கும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றாலும், விண்வெளி இணையச் சந்தையைக் (Space Internet) கைப்பற்றவும், உலகளாவிய தகவல் பரிமாற்றத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைக்கவும் சீனா காட்டும் வேகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கலக்கமடையச் செய்துள்ளது.
ஏற்கனவே விண்வெளியில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குச் செக் வைக்கவே சீனா இந்த மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அமேசான் போன்ற நிறுவனங்களும் இந்த ஓட்டத்தில் இருந்தாலும், சீனாவின் இந்த பிரம்மாண்டமான விண்ணப்பம் விண்வெளிப் பாதைகளில் பெரும் நெரிசலை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துபவர்களே எதிர்காலத்தின் வெற்றியாளர்கள் என்பதால், இந்த 'டிஜிட்டல் போர்' இப்போது பூமியைத் தாண்டி விண்வெளிக்கும் பரவியுள்ளது.
