பிரிட்டன் நாடு முழுவதும் இன்று 'சந்திரா' (Storm Chandra) புயலின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழை, அடர் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றினால் சாலைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 80 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்றும், 80 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் (Met Office) எச்சரித்துள்ளதால், ஒன்பதுக்கும் மேற்பட்ட மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
குறிப்பாக டெவன் (Devon) பகுதியில் வெள்ளப்பெருக்கு மிகக் கடுமையாக உள்ளது. அங்குள்ள ஆடர் ஆற்றில் (River Otter) இதுவரை இல்லாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், வெள்ளத்தில் சிக்கிய 25 வாகனங்களிலிருந்து மக்களைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இங்கிலாந்து முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்குக் கடுமையான வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டஜன் கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இடங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 மைல் வரை எட்டக்கூடும் என்பதால் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து மலைப்பகுதிகளில் சுமார் 20 செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் தாக்கம் லண்டன் மாநகரையும் இன்று முழுவதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது லண்டன் பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து தற்போதைக்குத் தப்பியுள்ளது. இருப்பினும், அடுத்த 35 மணிநேரத்திற்கு இந்தத் தாழ்வு மண்டலம் நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக வடக்கு இங்கிலாந்தில் 'குளிர் ஆரோக்கிய எச்சரிக்கை' (Cold health alerts) விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படலாம் என்பதால் சுகாதாரத்துறை தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பென்னின்ஸ் (Pennines) மற்றும் ஸ்காட்லாந்து மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
