ரஷ்ய ராணுவத்தில் போரிட மறுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், மனிதநேயமற்ற முறையிலான சித்ரவதைகளாக மாறியுள்ளன.
'மீட் கிரைண்டர்' (Meat Grinder) எனப்படும் உயிர்பலியைப் பற்றி கவலைப்படாத தற்கொலைப் படைத் தாக்குதல்களில் ஈடுபட மறுப்பதே இவர்கள் செய்த ஒரே குற்றம். கடந்த அக்டோபர் 2025 மற்றும் ஜனவரி 2026-ல் வெளியான புலனாய்வு அறிக்கைகளின்படி, சுமார் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய அதிகாரிகள் இது போன்ற சித்ரவதைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனைகள் வெறும் உடல் ரீதியான காயங்களுடன் நின்றுவிடுவதில்லை. பல வீரர்கள் உணவோ, தண்ணீரோ இன்றி காடுகளில் மரத்தில் கட்டப்பட்ட நிலையிலேயே உயிரிழக்க விடப்படுகிறார்கள். மேலும், 'பிட்ச்' (Pits) எனப்படும் ஆழமான குழிகளில் வீரர்களைத் தள்ளி, அவர்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி மணிக்கணக்கில் அடிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.
குறிப்பாக, சிறையிலிருந்து வந்து ராணுவத்தில் சேர்ந்த கைதிகள் மற்றும் போதிய பயிற்சியற்ற சாதாரண இளைஞர்கள் தான் இந்தப் பலிபீடங்களில் அதிகம் சிக்கிக் கொள்கிறார்கள். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது சொந்த அதிகாரிகளாலேயே சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவம் கைப்பற்றிய சில ரஷ்ய வீடியோக்களில், இரண்டு ரஷ்ய வீரர்களை ஒரு குழிக்குள் தள்ளி, "யார் யாரை அடித்துக் கொல்கிறார்களோ அவர்கள் மட்டும் உயிரோடு வெளியே வரலாம்" என அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் கொடூரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்ய அரசு இந்தப் பலி எண்ணிக்கையை மறைத்தாலும், 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 29,000 புகார்கள் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவாகியுள்ளன.



