ரோமேஷ் ரங்கநாதன் பிரித்தானியாவில் பிறந்த வளர்ந்த ஒரு முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரம். இவருடைய பெற்றோர் இருவரும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான காமெடி மற்றும் டிவி ஸ்டாராக வலம் வரும் இவர், தனது நகைச்சுவை திறமையால் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் ஒரு ஈழத் தமிழர் என்பது பலர் அறியாத விடையம்
பிபிசி (BBC) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற 'Michael McIntyre's Big Show' நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒரு கலகலப்பான சம்பவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரபலங்களிடம் முன்பு பழகியவர்களை அவர்களுக்குத் தெரியாமல் மேடைக்கு வரவழைத்து ஆச்சரியப்படுத்துவார்கள். அந்த வகையில், ரோமேஷ் ரங்கநாதனுக்கு ஒரு மிகப்பெரிய ‘அதிர்ச்சி’ காத்திருந்தது. தனது பள்ளிக்கால காதலியான சோனியா (Sonya) மேடைக்கு வந்ததைக் கண்டதும், ரோமேஷ் தன் தலையில் கை வைத்துக்கொண்டு "This is so bad!" (இது ரொம்ப மோசம்!) என்று கூறி வெட்கத்தில் நெளிந்தார்.
மேடையில் தோன்றிய சோனியா, "ரோமேஷ், என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்க, ஒரு நிமிடம் திகைத்துப் போன ரோமேஷ், பிறகு "ஆமாம், ஞாபகம் இருக்கிறது" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். தொகுப்பாளர் மைக்கேல் மெக்கின்டைர் சும்மா இருக்காமல், இவர்கள் இருவருக்கும் இடையிலான பழைய உறவைப் பற்றி பல 'க்ளூ'களைக் கொடுத்து கிண்டல் செய்தார். குறிப்பாக, 'Snogged' (முத்தமிட்டவர்கள்) என்ற வார்த்தையை திரையில் காட்டியபோது அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மிதந்தது.
பழைய நினைவுகளைப் பகிர்ந்த சோனியா, அவர்கள் இருவரும் கணக்கு வகுப்பில் ஒன்றாகப் படித்ததாகவும், பள்ளிக் காலத்தின் இறுதி பார்ட்டியில் (Leavers party) ரோமேஷ் தான் தன்னை முதலில் காதலிப்பதாகக் கூறி 'மூவ்' செய்ததாகவும் வெளிப்படையாகப் போட்டு உடைத்தார். இவர்கள் இருவரும் சுமார் ஒரு வாரம் மட்டுமே காதலர்களாக இருந்தார்களாம். ரோமேஷ் சிரித்துக்கொண்டே, "நாங்கள் அப்போது காட்டுப் பகுதிக்கு ஒரு சின்ன வாக்கிங் போனோம், அங்கே தான் நான் என் காதலைச் சொன்னேன்" என்று ஒப்புக்கொண்டார்.
நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, ரோமேஷ் ஆசையாக சோனியாவிடம், "சோனியா, இப்போதும் என்னைப்பற்றி நீ நினைக்கிறாயா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு சோனியா கொஞ்சமும் யோசிக்காமல், "இல்லை!" (No) என்று நறுக்கென்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் ரோமேஷ் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பழைய காதலியை இப்படி ஒரு பொது மேடையில் சந்தித்தது ரோமேஷிற்கு மறக்க முடியாத ஒரு சங்கடமான மற்றும் வேடிக்கையான அனுபவமாக அமைந்தது.
தற்போது ரோமேஷ் தனது பிஸியான டிவி வேலைகளுக்கு ஒரு சிறிய இடைவெளி விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிபிசி ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது எந்தத் திட்டமும் இல்லை, மனதிற்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யப்போகிறேன்" என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், பழைய காதலி முன்னால் அவர் தடுமாறிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
