தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, நேற்றைய(20) கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அதனை வாசிக்க மறுத்த ஆளுநர், பாதியிலேயே அவையை விட்டு வெளியேறினார். தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதையும் ஒரு காரணமாக அவர் சுட்டிக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், அரசு வழங்கிய உரையில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இருந்ததாகவும், ஆளுநர் பேசுவதைத் தடுக்கும் வகையில் அவருடைய மைக் அணைக்கப்பட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் ஒரு அரசியலமைப்புப் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டுமே தவிர, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட இது இடமல்ல என்ற ரீதியில் அரசு தரப்பில் முனுமுனுப்புகள் எழுந்தன. இந்தச் சம்பவம் ஆளுநர் - அரசு இடையிலான பனிப்போரை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "அரசின் குறைகளைச் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி கிடையாது" என்று காட்டமாகத் தெரிவித்தார். ஆளுநர் அரசியலில் ஈடுபட விரும்பினால் பதவியைத் துறந்துவிட்டு ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டுப் பேசலாம் என்றும் அவர் விமர்சித்தார். மைக் அணைக்கப்பட்டது குறித்து விளக்கிய சபாநாயகர், அவை மரபுப்படி சபாநாயகர் பேசும்போது மற்ற மைக்குகள் அணைக்கப்படுவது வழக்கம் தான் என்றும், இதற்காகத் தமிழ்நாடு சட்டசபையின் மரபுகளை மாற்ற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த அமளிக்கு மத்தியிலும், சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும், 24-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதற்குப் பதிலளித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிப்பது தான் சபையின் மாறாத மரபு என்று கூறிய சபாநாயகர், யாருக்காகவும் இந்த நடைமுறை மாற்றப்படாது என்பதையும் உறுதிபடக் கூறியுள்ளார்.
