
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு 'மூளை குழப்பம்'! தண்ணீர் குடிக்கப் போய் சதத்தை கோட்டைவிட்ட அபிமன்யு ஈஸ்வரன்!
பெங்கால் மற்றும் சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி 6-வது சுற்றுப் போட்டியில், ஒரு விசித்திரமான ரன் அவுட் அரங்கேறியுள்ளது. பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்கள் எடுத்து தனது 28-வது முதல் தர சதத்தை நோக்கி மிகச்சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 41-வது ஓவரின் கடைசி பந்தை சுதிப் சாட்டர்ஜி எதிர்கொண்டார். அந்தப் பந்து பவுலரிடமே நேராகச் சென்றது. அப்போது ஓவர் முடிந்துவிட்டது என்றும், 'டிரிங்க்ஸ்' இடைவேளை வந்துவிட்டது என்றும் தவறாக நினைத்த ஈஸ்வரன், பந்து 'டெட்' ஆவதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறி தண்ணீர் குடிக்க நடக்கத் தொடங்கினார்.
ஆனால், சுதிப் அடித்த பந்து பவுலர் ஆதித்ய குமாரின் விரல்களில் பட்டு நேராக நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்த ஸ்டம்பைத் தாக்கியது. பந்து ஸ்டம்பில் பட்டபோது ஈஸ்வரன் கிரீஸிற்கு மிகத்தொலைவில் இருந்தார். சர்வீசஸ் வீரர்கள் உடனடியாக ரன் அவுட் அப்பீல் செய்ய, கள நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் முறையிட்டனர். ரீப்ளேயில் ஈஸ்வரன் அவுட் என்பது தெளிவாகத் தெரிந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். ஒரு மூத்த வீரர் இவ்வளவு கவனக்குறைவாக ஆட்டமிழந்தது அங்கிருந்த ரசிகர்களையும் வீரர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விசித்திரமான ஆட்டமிழப்பு 2011-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது நடந்த 'இயன் பெல்' சம்பவத்தை நினைவூட்டியது. அன்று தேநீர் இடைவேளை என்று நினைத்து கிரீஸை விட்டு வெளியேறிய இயன் பெல்லை, இந்திய கேப்டன் தோனி விளையாட்டு உணர்வுடன் மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆனால், இன்றைய போட்டியில் சர்வீசஸ் அணி வீரர்கள் ஈஸ்வரனைத் திரும்ப அழைக்கவில்லை. இருப்பினும், தன் தவறை உணர்ந்த ஈஸ்வரன், "இது முழுக்க முழுக்க என் தவறு, இதில் சர்வீசஸ் வீரர்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை" என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார்.
அபிமன்யு ஈஸ்வரன் அவுட் ஆனாலும், மற்றொரு தொடக்க வீரரான சுதிப் சாட்டர்ஜி அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் (209 ரன்கள்) விளாசினார். இதனால் பெங்கால் அணி தனது முதல் இன்னிங்ஸில் 519 ரன்கள் என்ற இமாலய இலக்கைப் பதிவு செய்தது. இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெங்கால் அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சர்வீசஸ் அணியின் பேட்டிங் வரிசையைத் திணறடித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் சர்வீசஸ் அணி 126 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
அபிமன்யு ஈஸ்வரன் இந்த சீசனில் ஏற்கனவே ஒரு சதத்தை நழுவவிட்ட நிலையில், இந்த விசித்திரமான ரன் அவுட் அவருக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீரர், இது போன்ற ஒரு 'மறதி'யால் சதத்தை இழந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. "விளையாட்டு உணர்வு முக்கியமா அல்லது விதிகளின்படி ஆடுவது முக்கியமா?" என்ற கேள்வியை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
Tags
SPORTS NEWS