அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்க விரும்புவதாக மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், "கிரீன்லாந்து அதன் மக்களுக்குச் சொந்தமானது. அதன் எதிர்காலத்தை அந்த மக்களும் டென்மார்க் நாடும் மட்டுமே தீர்மானிக்க முடியும். இதில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தின் வளமான கனிம வளங்கள் மற்றும் அதன் முக்கியப் பாதுகாப்பு அமைவிடமே அமெரிக்காவை ஈர்ப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டமைப்பிற்குள் ஒரு பிளவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், அமெரிக்க அதிபரின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் போன்றோர், "கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது, எவரும் அமெரிக்காவை ராணுவ ரீதியாக எதிர்க்கப் போவதில்லை" என்று கூறி அழுத்தத்தை அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே உக்ரைன் மற்றும் வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் வேளையில், கிரீன்லாந்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிப்பது ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்புக் குறித்துச் சிந்திக்க வைத்துள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் (Arctic region) தனது பிடியை வலுப்படுத்த ஐரோப்பா தனது ராணுவ இருப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
