கனடாவில் அரங்கேறிய நவீன அடிமைத்தனம்! தமிழ் தொழிலாளர்களை சுரண்டிய உணவக உரிமையாளர்களுக்கு சிறை: அதிரடி தீர்ப்பு!
கனடாவின் கால்கரி நகரில் 'மெரினா தோசை தந்தூரி கிரில்' என்ற உணவகத்தை நடத்தி வந்த மணிகண்டன் காசிநாதன் சந்திரமோகன், மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகிய மூன்று தமிழ் உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து பிழைப்பு தேடி வந்த சக தமிழ் தொழிலாளர்களை நவீன கால அடிமைகளாக நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இவர்களது செயல் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தோர் சமூகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. 2017 முதல் 2020 வரை நீடித்த இந்த கொடூர சுரண்டல் தற்போது நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது.
வெறும் 1,000 டாலர்கள் மட்டுமே செலவாகும் விசா புதுப்பித்தல் கட்டணத்திற்கு, தொழிலாளர்களிடம் தலா 24,000 டாலர்கள் (சுமார் 20 லட்சம் ரூபாய்) வரை கேட்டு இந்த கும்பல் மிரட்டியுள்ளது. "கேட்ட பணத்தைத் தராவிட்டால் இந்தியாவுக்கு நாடு கடத்தி விடுவோம்" என்று அச்சறுத்தி, அந்த அப்பாவி தொழிலாளர்களை வாரத்தில் ஆறு நாட்கள், தினமும் 14 மணி நேரம் ஓய்வின்றி மிகக் கடுமையான சமையல் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர். உழைப்பிற்கான ஊதியத்தை முறையாக வழங்காமல், அதைத் தாங்கள் கேட்ட சட்டவிரோதப் பணத்திற்காகப் பிடித்துக் கொண்டு, அவர்களைச் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு மிக மோசமான, சுகாதாரமற்ற இடத்தையே இந்த உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர். "நாங்கள் உலகநாடுகள் பலவற்றில் சமையல் கலைஞர்களாகப் பணியாற்றியிருக்கிறோம், ஆனால் கனடாவில் மட்டும்தான் இப்படி அடிமைகளாகச் சிக்கிச் சீரழிந்தோம்" என அவர்கள் நீதிமன்றத்தில் கண்ணீருடன் முறையிட்டனர். தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிரந்தரக் குடியுரிமை (PR) வாங்கித் தருவதாக ஆசை காட்டி, சொந்த நாட்டு மக்களை ஏமாற்றிய இந்த உரிமையாளர்களின் உண்மை முகம் இப்போது உலகிற்குத் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அவர்களுக்கு வார இறுதி நாட்களில் அனுபவிக்கக் கூடிய 90 நாட்கள் சிறைத்தண்டனையும், 18 மாத நன்னடத்தை விதிகளையும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 44,000 டாலர்களை (சுமார் 36 லட்சம் ரூபாய்) இழப்பீடாகத் திருப்பி வழங்கவும் உத்தரவிட்டார். "எந்தவொரு முதலாளியும் உங்களை குடியேற்றக் கட்டணம் கேட்டு மிரட்டவோ, உங்கள் விசா நிலையை வைத்து அச்சுறுத்தவோ முடியாது" என்று எச்சரித்த நீதிபதி, இது போன்ற சுரண்டல்கள் நடந்தால் அஞ்சாமல் உடனடியாக அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
