மத்திய மற்றும் மாநில அரசுகளின் பெரும் நாடகம் ஒன்று தற்போது அரங்கேறி வருகிறது. ஒரு சினிமா படத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறது. இன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற அமர்வில் இருந்த 2 நீதிபதிகளும், 'ஜன நாயகன்' படத்திற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லவில்லை. மாறாக மீண்டும் வழக்கை, தனி நீதிபதி முன்பாக நடத்துங்கள் என்று கூறி மீண்டும் வழக்கை நடத்த சொல்லிவிட்டார்கள்.
அதாவது ஏற்கனவே தனி நீதிபதி ஆஷா, சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறிய தீர்ப்பு செல்லுபடியற்றது என்று இன்று அறிவித்த நீதிபதிகள், ஒரு தீர்ப்பைத் தாமே சொல்லி இருக்க முடியும். ஏனெனில் இரு தரப்பு விவாதங்களையும் அவர்கள் ஏற்கனவே கேட்டறிந்து கொண்டார்கள் அல்லவா? ஆனால் அவர்கள் மேலிடத்து உத்தரவுக்கு இணங்க, மீண்டும் காலத்தை வீணடிக்க இன்று இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்று நாம் சொல்லவில்லை... மாறாக மக்கள் பேசுகிறார்கள்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லவே? இனி மீண்டும் நீதிபதி ஆஷா முன்னிலையில் வழக்கு ஆரம்பிக்க வேண்டும். பின்னர் அவர் தீர்ப்பு வழங்கினால் அதனை மீண்டும் எதிர்க்கும் தணிக்கை குழு, சில வேளை உச்ச நீதிமன்றம் செல்வார்கள். இப்படி எந்த அளவுக்கு 'ஜன நாயகன்' படத்தை வெளியிடாமல் இழுத்தடிக்க முடியுமோ, அந்த அளவு இழுத்தடிப்பதே நோக்கம்.
இது BJP கட்சியின் மற்றும் DMK கட்சியின் ஒரு கூட்டு முயற்சி என்றுதான் கூறவேண்டும். தமிழக அரசு திரைமறைவில் தன்னால் எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறது. மத்தியில் BJP அரசு, தன்னால் எதனை எல்லாம் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறது. 'அட, ஒரு படத்தைப் பார்த்தாடா இந்த அளவு பயம் கொள்கிறீர்கள்?' என்று மக்கள் நினைக்கும் அளவு நிலைமை திரும்பியுள்ளது. இவர்களுக்கு ஒன்று புரியவில்லை. 'ஜன நாயகன்' படம் வெளியாகாமல் இழுத்தடிக்க இழுத்தடிக்க, விஜய்யின் ஆதரவு பெருகிக் கொண்டே செல்லும். விஜய்க்கு வாக்குப் போடலாமா? வேண்டாமா? என்று இருந்த மக்கள் கூட இனி விஜய்க்குத்தான் வாக்குப் போடுவார்கள்.
இதனை இவர்கள் இன்னும் புரியவில்லை என்பதுதான் மிகவும் சோகமான விஷயம். படத் தயாரிப்பு நிறுவனம் போட்ட 500 கோடி, இந்த சினிமா துறையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தென்னிந்திய சினிமா துறை, என்று எத்தனை ஆயிரம் பேர் இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்படைகிறார்கள்? இவை எதுவும் இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால், "மக்களைப் பாதுகாக்கும் அரசு" என்று சொல்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லையே? அமெரிக்க ஹாலிவுட்டை எடுத்துக் கொண்டால், எத்தனை படங்களில் அமெரிக்க ஜனாதிபதியையே முட்டாளாகக் காட்டிப் படங்கள் எடுத்திருக்கிறார்கள். அந்நாட்டுத் தணிக்கைக் குழு அதில் தலை போடுவதே இல்லை. ஏனெனில் சினிமாவை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ளுங்கள் என்பது அவர்கள் கொள்கை. ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவில்... 'ஜன நாயகனுக்கு'த் தடை!
