நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தரை பேட்டிங் செய்ய களமிறக்கிய இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாகச் சாடியுள்ளார். "வீரர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறதா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பந்துவீச்சின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பு பகுதியில் தசைப்பிடிப்பு (Side Strain) ஏற்பட்டது. இதனால் 5 ஓவர்களுடன் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இருப்பினும், இந்திய இன்னிங்ஸின் இக்கட்டான சூழலில் சுந்தர் பேட்டிங் செய்ய மீண்டும் களமிறக்கப்பட்டார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "கடந்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது ஷுப்மன் கில் காயமடைந்திருந்தபோது, அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்டும் அவர் களமிறங்கவில்லை. வீரரின் நலன் கருதி அன்று அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதே போன்ற ஒரு தாராள மனப்பான்மை வாஷிங்டன் சுந்தர் விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை?" என்று காட்டமாக வினவியுள்ளார்.
போட்டியின் போது சுந்தரால் ஒரு ரன்னைக் கூட ஓடி எடுக்க முடியாத நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய கைஃப், "பந்து எல்லைக்கோட்டுக்கு அருகில் சென்றாலும் அவரால் இரண்டு ரன்கள் ஓட முடியவில்லை. இது மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுலின் ஆட்டத்தையும், வேகத்தையும் சேர்த்தே பாதித்தது. ஒரு வாரத்தில் குணமாக வேண்டிய காயம், இதுபோன்ற தேவையற்ற ரிஸ்க்கான முடிவுகளால் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். டி20 உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் இது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், சுந்தரை பிரஷரான சூழலில் களமிறக்கியது அவரது தசைப்பிடிப்பை இன்னும் தீவிரமாக்கும் என்று கவலை தெரிவித்துள்ள கைஃப், "பந்துக்கு ஒரு ரன் தேவைப்படும் நிலையில், காயமடைந்த வீரருக்குப் பதில் வேறு யாரையாவது இறக்கியிருக்கலாம். வீரர்களின் உடல்நலனை விட வெற்றி முக்கியமல்ல" என்று இந்திய அணி நிர்வாகத்தை விளாசியுள்ளார். காயத்தினால் 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுந்தரின் இடம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கைஃப்பின் இந்த விமர்சனம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
