தமிழக அரசியலில் இப்போது "கூட்டணி" என்றாலே 'தவெக' (TVK) பெயர்தான் பலமாக ஒலிக்கிறது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி்க் கழகத்துடன் கைகோர்ப்பது குறித்து ராகுல் காந்தி தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர். திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியைச் சம்மதிக்க வைத்து ஒரு புதிய 'Third Front' (மூன்றாவது அணி) உருவாக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
விஜய்யும் ராகுல் காந்தியும் நீண்ட கால நண்பர்கள் என்பதால், இந்தக் கூட்டணி அமைவதில் பெரிய சிக்கல் இருக்காது என தவெக தரப்பு நம்பிக்கையுடன் இருக்கிறது. ராகுல் காந்தியுடன் விஜய் போனில் பேசியதாகவும், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்ததாகவும் சொல்லப்படும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் 'High Voltage' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "Natural Ally" (இயற்கையான கூட்டணி) என்று தவெக-வினர் காங்கிரஸைக் கொண்டாடி வருவது, அறிவாலயத்தை சற்று யோசிக்க வைத்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களை வழங்கிய திமுக, இந்த முறை காங்கிரஸ் கேட்ட 35 முதல் 40 இடங்களைக் கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், "ஆட்சியில் பங்கு" (Power Sharing) என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஸ்டாலின் அவர்கள் நேரடியாகவே நிராகரித்துவிட்டார். இதனால் கடுப்பான தமிழக காங்கிரஸ் தலைவர்கள், "இனி திமுகவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது" எனத் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒருபுறம் திமுக தனது பழைய கூட்டணிகளைத் தக்கவைக்கப் போராட, இன்னொரு புறம் தவெக மற்றும் காங்கிரஸ் இணையுமானால் அது தமிழகத் தேர்தலையே தலைகீழாக மாற்றிவிடும். அதிமுக-விலிருந்து சிலர் வெளியேறி தவெக-வில் இணைவது போல, திமுக அதிருப்தியாளர்களும் அந்தப் பக்கம் சாய வாய்ப்புள்ளது. மொத்தத்தில், 2026-ல் தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு 'High Profile' தேர்தலைப் பார்க்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.
