
கருங்கடலில் ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் (Novorossiysk) துறைமுகத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:15 மணியளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கசகஸ்தான் நாட்டின் அரசுக்குச் சொந்தமான 'கஸ்முனைகேஸ்' (KazMunayGas) நிறுவனத்தின் துணை நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட 'மெட்டில்டா' (Matilda) மற்றும் 'டெல்டா ஹார்மனி' (Delta Harmony) ஆகிய இரண்டு எண்ணெய் ஏற்றிச் செல்லும் பிரம்மாண்ட கப்பல்கள் மீது உக்ரைனிய காமிகேஸ் ட்ரோன்கள் மோதித் தாக்குதல் நடத்தின. ரஷ்யாவின் அனாபா நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் போது மெட்டில்டா கப்பலில் வெடிச்சம்பவம் நிகழ்ந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக பெரும் தீ விபத்தோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மற்றொயொரு கப்பலான டெல்டா ஹார்மனியில் சிறிய அளவில் தீப்பிடித்தது, ஆனால் அது உடனடியாக அணைக்கப்பட்டது. இரண்டு கப்பல்களும் தாக்குதலின் போது காலியாக இருந்ததாலும், எண்ணெய் ஏற்றப்படாமல் இருந்ததாலும் கடலில் கச்சா எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகள் தவிர்க்கப்பட்டன. தற்போது இந்தக் கப்பல்கள் கடலில் மிதக்கும் தகுதியுடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கசகஸ்தான் தனது நாட்டின் 80 சதவீத எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு (CPC) மற்றும் ரஷ்ய துறைமுகங்களையே நம்பியுள்ளது. இந்தத் தாக்குதலால் சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் கசகஸ்தானின் எண்ணெய் உற்பத்தி நடப்பு மாதத்தில் 35 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி உள்கட்டமைப்பைப் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியை கசகஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் நேரடிப் பொறுப்பேற்க மறுத்தாலும், ரஷ்யாவின் பொருளாதார ஆதாரங்களைச் சிதைப்பதே தங்கள் நோக்கம் எனத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ரஷ்யாவோ, போரில் சம்பந்தப்படாத மூன்றாம் தரப்பு நாடுகளின் வர்த்தகத்தை உக்ரைன் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கிரேக்கம் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் கருங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையை உயர்த்தவும், உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் புதிய சிக்கல்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.