வங்கதேசத்தின் ஜெனைதா (Jhenaidah) மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவைப் பெண் ஒருவர் இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரது முடியை வெட்டி கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அப்பெண் மயக்கமடைந்த நிலையில், மறுநாள் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு ஜெனைதா சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நிலத்தகராறு மற்றும் நீண்டகாலத் தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, ஷாஹின் (Shahin) என்பவரிடமிருந்து நிலம் மற்றும் வீடு வாங்கியுள்ளார்.
அப்போதிலிருந்தே ஷாஹின் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அடிக்கடி தகாத முறையில் அணுகியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு, ஷாஹின் மற்றும் அவரது கூட்டாளியான ஹசன் ஆகியோர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் உள்ளனர்.
இது குறித்து காளிகஞ்ச் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான ஷாஹின் மற்றும் அவரது கூட்டாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து நிகழும் இத்தகைய வன்முறைகள் அங்குள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
