சர்வதேச அமைப்புகளிலிருந்து அதிரடியாக வெளியேறும் அமெரிக்கா: 66 அமைப்புகளுக்கான நிதியை முடக்கி ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கியக் குறிப்பாணையில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க மக்களின் வரிப்பணம், அமெரிக்காவின் முன்னுரிமைகளுக்குப் பதில் உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களை (Globalist Agendas) ஊக்குவிக்கும் அமைப்புகளுக்குச் செலவிடப்படுவதை ஏற்க முடியாது என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டுள்ள 66 அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஐக்கிய நாடுகள் சபையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, உலகளாவிய பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தைக்கான தளங்கள், இடம்பெயர்வு மற்றும் குடியேற்றத்திற்கான அமைப்புகள், அமைதி மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சில சர்வதேச மன்றங்கள் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. இந்த அமைப்புகள் அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கும், கொள்கைகளுக்கும் முரணாகச் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
"தீவிரமான பருவநிலை மாற்றக் கொள்கைகள், உலகளாவிய ஆட்சி அதிகாரம் மற்றும் அமெரிக்காவின் இறையாண்மையோடு மோதும் சில கருத்தியல் திட்டங்களை இந்த அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன" என்று வெள்ளை மாளிகை சாடியுள்ளது. பல அமைப்புகள் மிகத் திறமையற்ற முறையில் செயல்படுவதாகவும், அவை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் செழுமைக்கு எந்தப் பயனும் அளிப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பில்லியன் டாலர் வரிப்பணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தத் திடீர் விலகல் உலகளாவிய ஒத்துழைப்பில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவியில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது என்பதால், பல சர்வதேசத் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனது முதல் பதவிக்காலத்திலும் இது போன்ற பல ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறிய ட்ரம்ப், தற்போது மீண்டும் தனது 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' (America First) கொள்கையை மிகத் தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
