சீன நிறுவனங்கள் மீதான தடையை நீக்க இந்தியா திட்டம்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தக உறவில் அதிரடி மாற்றம்!
கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, இந்தியாவுடன் நிலப்பரப்பைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்திய அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க வேண்டுமானால் கூடுதல் பதிவுகள் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற கடுமையான விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இது மறைமுகமாகச் சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது அந்தத் தடைகளைத் தளர்த்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 700 பில்லியன் டாலர் முதல் 750 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் இருந்த தடையை நீக்க அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தடையால் பல முக்கியத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைகளே கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தட்டுப்பாடுகள் மற்றும் திட்டத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை இந்தியா எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
சீன நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இந்தியச் சந்தையில் போட்டி அதிகரிக்கும் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான உயர்நிலைக் குழுவும் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் மற்றும் தொழில்முறை விசா நடைமுறைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வர்த்தகத் தளர்வு அடுத்த கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அனைத்துத் தடைகளும் ஒரேடியாக நீக்கப்படாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் (FDI) மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவுடனான வர்த்தகச் சூழல் மற்றும் உள்நாட்டுத் தேவை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் வகையில், இந்தியாவின் இந்த 'புதிய சீனக் கொள்கை' அமையவிருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கான இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
