தன் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய ரியல் "ஹீரோ" ஏஞ்சலினி,


பற்றி எரிந்த வீட்டில் சிக்கிய தாய் மற்றும் குழந்தைகள்: உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய "ஹீரோ" அண்டை வீட்டார்!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்தில், அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையால் ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிர் தப்பினர். ஸ்டீவன் ஏஞ்சலினி (Steven Angelini) என்ற நபர் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வெளியே கேட்ட வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு எழுந்துள்ளார். தனது வீட்டு வாசலில் இருந்த கேமராவைச் சோதித்தபோது, எதிரே இருந்த வீடு தீப்பிடித்து எரிவதையும், ஜன்னல்கள் வழியாகப் புகை மூட்டமாக வெளியேறுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று ஏஞ்சலினி கத்திக்கொண்டே ஓடியபோது, உள்ளே இருந்து மரண ஓலம் போன்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. தீ மளமளவெனப் பரவியதால், அங்கு நிலமை மிகவும் மோசமாக இருப்பதை அவர் உணர்ந்தார். அந்தத் தருணத்தில் தனது கையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக ஏணியைப் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்த ஏஞ்சலினி, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். ஜன்னல் வழியாகத் தனது குழந்தைகளைக் கீழே தன்னிடம் தூக்கிப் போடுமாறு அந்தத் தாயிடம் அவர் கத்தினார். அவர்கள் உயிர் பிழைக்கச் சில நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் குழந்தைகளைப் பாதுகாப்பாகத் தனது கைகளில் ஏந்திப் பிடித்தார்.

குழந்தைகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு, மற்ற அண்டை வீட்டார்கள் உதவியுடன் ஏணி கொண்டு வரப்பட்டு அந்தத் தாயும் தீயிலிருந்து மீட்கப்பட்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏஞ்சலினியின் இந்த தன்னலமற்ற வீரச் செயலை பால்டிமோர் கவுண்டி தீயணைப்புத் துறைத் தலைவர் ஜோசப் டிக்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "சமூகத்தின் வலிமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்துப் பேசிய ஏஞ்சலினி, "மற்றவர்களுக்காக என் உயிரைப் பணையம் வைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை; கடவுள் என்னை மற்றவர்களுக்கு உதவவே இங்கு வைத்துள்ளார், என் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் நான் செய்தேன்" என்று எளிமையாகக் கூறினார். தற்போது அந்தத் தாயும் குழந்தைகளும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியின் மக்கள் ஒன்றிணைந்து, தீயில் அனைத்தையும் இழந்த அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான ஆடைகள் மற்றும் உதவிகளைச் சேகரித்து வழங்கி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post