நடிகர் விஜய் அரசியலுக்கு முழுமையாக நுழையும் முன் நடித்துள்ள கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் 'ஜன நாயகன்' படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று (ஜனவரி 15, 2026) விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு, இதில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது.
உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, படம் வெளியாகத் தாமதமானால் பெரும் நஷ்டம் ஏற்படும், நான் எல்லாம் இழந்துவிட்டேன்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வரும் ஜனவரி 20-ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இப்போது குறுக்கிட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், தனி நீதிபதி மிகத் தீவிரமான வேகத்தில் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக, இந்த விவகாரத்தை மெட்ராஸ் உயர் நீதிமன்றமே கையாள வேண்டும் என்றும், ஜனவரி 20-ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த இறுதி முடிவு இப்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இப்படம் தற்போது சட்டப் போராட்டங்களால் தள்ளிப்போயுள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
