சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? 'ஒரே ஒரு இன்னிங்ஸ்' மாறிய தலைவிதி


சாம்சன் அவுட்.. கிஷன் இன்? 'ஒரே ஒரு இன்னிங்ஸ்' மாற்றிய தலைவிதி: சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி என்பது எப்போதும் ஒரு தீராத போராகவே இருந்து வருகிறது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து தேர்வுக் குழு காய்களை நகர்த்தி வரும் வேளையில், சஞ்சு சாம்சன் கோட்டை விட்ட வாய்ப்பு அவரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், திலக் வர்மாவுக்கு ஏற்பட்ட திடீர் காயம் இஷான் கிஷனுக்கு கதவைத் திறந்தது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய இஷான், கிவிஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்த அவரது ஆட்டம், அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதை பறைசாற்றியது. ஆனால், நட்சத்திர வீரராகக் கருதப்படும் சஞ்சு சாம்சன், முதல் போட்டியில் 10 ரன்களும், இரண்டாவது போட்டியில் வெறும் 6 ரன்களும் 3வது போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாமல் ரசிகர்களை ஏமாற்றினார்.

1983 உலகக்கோப்பை நாயகன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சஞ்சுவின் இந்த பொறுப்பற்ற ஆட்டத்தை கடுமையாகச் சாடியுள்ளார். "சஞ்சுவுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பு, அதில் ஒருமுறை அவுட்டாவதில் இருந்து தப்பித்த பிறகும் அதே தவறை மீண்டும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் சீறியுள்ளார். சஞ்சுவிடம் அதிரடி இருந்தாலும், ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கும் நிதானம் இல்லை என்பதே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. மேலும், இஷான் கிஷன் ஒரு இடது கை பேட்டர் என்பது அவருக்குக் கூடுதல் பலமாக அமைகிறது.

புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், சஞ்சு சாம்சன் கடந்த 10 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டு முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மறுபுறம், உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடி காட்டி வரும் இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் வருகை சஞ்சுவுக்கு கழுத்தில் தொங்கும் கத்தியாக மாறியுள்ளது. திலக் வர்மா அணிக்குத் திரும்பும் பட்சத்தில், மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க இன்னும் சில போட்டிகளே மிச்சமுள்ளன. சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற சீனியர் வீரர்களும், அபிஷேக் சர்மா போன்ற இளம் ரத்தங்களும் வரிசை கட்டி நிற்கும் நிலையில், சஞ்சு சாம்சன் அடுத்த போட்டியில் ஒரு 'மெகா' இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இந்திய அணியில் நீடிக்க முடியும். இல்லையெனில், 'கேரளா சூப்பர் ஸ்டார்' சஞ்சுவின் கதை இந்திய அணியில் முடிவுக்கு வரும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post