விஜய் மீதான விசாரணை தொடரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரமாக உள்ளது. அதில் அவரது பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தமிழகமே எதிர்பார்த்த டி.வி.கே தலைவர் விஜய்யிடம் நடத்தப்பட்ட சி.பி.ஐ விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இந்த 'கிடுக்கிப்பிடி' விசாரணை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. ஏற்கனவே கடந்த 12-ம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்றுடன் இந்த விசாரணைப் படலம் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளது. விசாரணை முடிந்து சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய், இன்றே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணையின் போது சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, பிரச்சார வாகனத்தில் நின்றபோது கூட்ட நெரிசலை கவனித்தீர்களா? அந்த நிகழ்வு ஏன் 7 மணி நேரம் தாமதமானது? நெரிசலில் மக்கள் சிக்கியபோது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? வாகனம் ஏன் நிற்காமல் முன்னோக்கி நகர்த்தப்பட்டது? எனப் பல 'பகீர்' கேள்விகளால் விஜய்யைத் துளைத்தெடுத்துள்ளனர். சில கேள்விகளுக்கு விஜய் கூலாகப் பதிலளித்தாலும், சில சிக்கலான கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளாராம்.
இந்த விவகாரத்தில் விஜய் கொடுத்த பதில்களுக்கு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ அதிகாரிகள் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கை வேகப்படுத்தியுள்ள சி.பி.ஐ, வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் குற்றப்பத்திரிகையை (Charge sheet) தாக்கல் செய்யத் தீவிரமாக உள்ளது. அதில் விஜய்யின் பெயரையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை இது நடந்தால், அது வரப்போகும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகப் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்கும்.
தற்போதைக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் இந்த சி.பி.ஐ விசாரணை ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றால் அதை விஜய் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. எதற்கும் அசராத தளபதி, இந்த சட்டச் சிக்கல்களைத் தாண்டி 'கெத்தாக' தேர்தலைச் சந்திப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
