BREAKING NEWS ஸ்பெயினில் கோரம்: ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்ட பயணிகள் !

 


தெற்கு ஸ்பெயினின் கோர்டோபா (Córdoba) மாகாணத்தில் உள்ள அடமுஸ் (Adamuz) பகுதியில், நேற்று இரவு 7.40 மணியளவில் இரண்டு அதிரடி வேக ரயில்கள் (High-speed trains) நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது. மலகாவிலிருந்து மெட்ரிட் நோக்கிச் சென்ற 'Iryo' நிறுவனத்தின் ரயில் திடீரெனத் தடம் புரண்டு, பக்கத்து தண்டவாளத்தில் 125 மைல் வேகத்தில் (125mph) சீறி வந்த 'Renfe' ரயிலின் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வீரியம் எவ்வளவு அதிகம் என்றால், ரயிலின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் தூக்கி வீசப்பட்டு, விபத்து நடந்த இடத்திலிருந்து பல நூறு அடி தூரத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


நிலநடுக்கம் போல் அதிர்ந்த ரயில்: ஜன்னலை உடைத்துத் தப்பிய பயணிகள்!

விபத்தின் போது ரயிலில் இருந்த பயணிகள், "திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போலத் தோன்றியது, அடுத்த நொடி எல்லாம் தலைகீழாக மாறியது" எனத் தங்களின் மரண பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரயிலின் பெட்டிகள் சுமார் 13 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். பல பயணிகள் அங்கிருந்த 'எமர்ஜென்சி ஹேமர்களை' (Emergency hammers) பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்துத் உயிர் தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், நள்ளிரவிலும் டார்ச் விளக்குகளின் உதவியுடன் சிதைந்து போன இரும்புப் பெட்டிகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தட்டையான தண்டவாளத்தில் தடம் புரண்டது எப்படி? மர்மமான விபத்து!

இந்த விபத்து ஸ்பெயின் போக்குவரத்துத் துறையையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக வளைவுகளில் தான் ரயில்கள் தடம் புரளும், ஆனால் இது மிகவும் தட்டையான மற்றும் நேராக உள்ள தண்டவாளத்தில் (Straight stretch) நடந்துள்ளது. அதுவும் இந்தத் தண்டவாளம் கடந்த மே மாதம் தான் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புயெண்டே, "இது உண்மையிலேயே மிகவும் விசித்திரமான (Truly strange) விபத்து" எனத் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளே ஆன அதிநவீன ரயில்கள் இப்படி மோதிக்கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு மாத காலம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு தழுவிய சோகம்: ஸ்பெயின் பிரதமர் இரங்கல்!

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். "இன்று நம் நாட்டுக்கு ஒரு துயரமான இரவு" என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த 120-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக மெட்ரிட் மற்றும் ஸ்பெயினின் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post