தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது பழியைப் போடும் விதமாக, டெல்லியில் இருந்து சிபிஐ (CBI) காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 12-ம் தேதி நடந்த விசாரணையின் போது விஜயிடம் வழக்கத்திற்கு மாறாக வேறு கோணத்தில் கேள்விகள் துளைத்தெடுக்கப்பட்டன.
ஆனால் நேற்று(19) நடந்த விசாரணையில், குறிப்பாக, "கரூரில் நீங்கள் குடிநீர் பாட்டில்கள் வீசிய போது , அங்கு நிலவிய கூட்ட நெரிசலை நீங்கள் கவனிக்கவில்லையா? நெரிசலைக் குறைக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாமே, அதை விடுத்து ஏன் தொடர்ந்து பரப்புரை செய்தீர்கள்?" என்று அதிகாரிகள் சரமாரியாகக் கேட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகளை முன்வைத்தே விசாரணை இறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதிகாரிகளின் கேள்விகள் இதோடு நின்றுவிடவில்லை. "பெரிய நடிகராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கும் உங்களுக்கு, உங்கள் வருகையையொட்டி எவ்வளவு கூட்டம் கூடும் என்பது தெரியாதா? கரூர் கூட்டத்திற்கு வர சுமார் 7 மணிநேரம் தாமதமானதற்கு உண்மையான காரணம் என்ன?" என்றும் குடைந்துள்ளனர்.
சாலைகளில் வளைவுகள் இருந்ததால் தாமதம் ஏற்பட்டது என்ற காரணத்தை ஏற்க மறுத்த சிபிஐ, அதற்கான உரிய ஆதாரங்களை இன்றே சமர்ப்பிக்க வேண்டும் என விஜய்க்கு அதிரடி நிபந்தனை விதித்துள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது.
விஜயிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா அல்லது மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்ற கேள்விக்கு, கட்சியின் முக்கிய நிர்வாகி நிர்மல் குமார் பதிலளிக்கையில், "தற்போதைய விசாரணை முடிந்துவிட்டது, மீண்டும் அழைப்பார்களா என்பது குறித்துத் தெரியவில்லை" என்று மழுப்பலாகவே கூறியுள்ளார். இதனால் விசாரணை முற்றிலுமாக முடிந்துவிட்டதா என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. அதேசமயம், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், சிபிஐ அறிக்கையில் கரூர் துயரச் சம்பவத்திற்கு விஜய் தரப்புதான் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டால், அது அவர் மீதான நற்பெயரைக் குலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் இத்தகைய அறிக்கை வெளியானால், விஜய்யின் அரசியல் செல்வாக்கில் பெரிய சரிவு ஏற்படும் என்றும், அது மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
