அண்ணா fans கிட்ட Sorry கேட்டு Apology Certificate வாங்கு: கடுமையான தாக்குதல்


விஜய் ரசிகர்களுக்கும் சுதா கொங்கராவிற்கும் மோதலா? ‘பராசக்தி’ இயக்குநர் உடைத்த அதிரடி உண்மைகள்!

சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தி, இந்த ஆண்டு பொங்கல் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், இப்படம் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் பெரும் போர்க்களமே உருவானது. குறிப்பாக, நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சிக்கலால் தள்ளிப்போக, பராசக்தி மட்டும் திட்டமிட்டபடி வெளியானதால், சில மர்ம நபர்கள் எக்ஸ் (X) தளத்தில் சுதா கொங்கராவையும் படக்குழுவையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை குறித்துப் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, தன்னைச் சுற்றி நடக்கும் ‘ஆன்லைன் ரவுடித்தனம்’ குறித்து மனவேதனை தெரிவித்தார். "தெரியாத முகவரிக்கு பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு பெண்ணின் கேரக்டரைச் சிதைப்பது (Character Assassination) மிக எளிது. ஆனால், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்," என அவர் கொந்தளித்தார். படம் வெளியாவதற்கு முதல் நாள் மதியம் 25 மாற்றங்களைச் செய்யச் சொன்னபோது, தூங்காமல் போராடி படத்தை திரைக்குக் கொண்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.

முக்கியமாக, விஜய் ரசிகர்களின் பெயரைச் சொல்லி சிலர் மிரட்டல் விடுத்தது குறித்து அவர் பேசுகையில், (CBFC கிட்ட Certificate வாங்கறது பெருசில்ல, அண்ணா fans கிட்ட Sorry கேட்டு Apology Certificate வாங்கு )"தணிக்கை சான்றிதழ் வாங்குவது முக்கியமல்ல, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புச் சான்றிதழ் வாங்குங்கள் என்று மிரட்டுகிறார்கள். இதை உண்மையான ரசிகர்கள் செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. யாரோ சிலர் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது," என்றார். நான் சொன்ன கருத்துக்கள் தவறாகத் திரிக்கப்பட்டு, நான் எல்லோரையும் ரவுடி என்று சொன்னதாகச் செய்திகள் பரப்பப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மீதான தனது அன்பைப் பகிர்ந்துகொண்ட சுதா, "நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை. ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ண வேண்டியது, ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. அவரது ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு. ஒரு படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவால் தடுக்கப்படுவது என்பது கொடுமையான விஷயம். இது யாருக்கும் நடக்கக் கூடாது," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பராசக்தி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருந்தாலும், சுதா கொங்கராவின் இயக்கமும் சிவகார்த்திகேயனின் நடிப்பும் சமூக வலைதளத் தாக்குதல்களைத் தாண்டி பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. "பிடித்திருந்தால் ஆதரியுங்கள், ஆனால் அவதூறு பரப்பாதீர்கள்" என்ற சுதாவின் கோரிக்கை, திரையுலகில் ஆரோக்கியமான விமர்சன கலாச்சாரம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.



Post a Comment

Previous Post Next Post