தற்போது வெனிசுவேலா நாட்டின் ஜனாதிபதி கைவிலங்கோடு அமெரிக்காவில் இருக்கும் காட்சியை வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி மதுரோவை விசாரிக்கும் என்றும், இனி வெனிசுவேலா நாடு அமெரிக்கக் கட்டுப்பாட்டில் (Control) கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. முப்படைகளையும் கொண்ட ஒரு பலமான நாடு வெனிசுவேலா. இதனை விட வெனிசுவேலா நாட்டிற்கு ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அரசும் உதவிகளைப் புரிந்து வந்தன.
எவரும் எதிர்பாராத வகையில் அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பல உலக நாடுகள் கண்டித்துள்ளன. நாளை எந்த ஒரு நாட்டிற்கும் இந்த நிலை தோன்றலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. வெனிசுவேலா நாட்டின் Radar-இல் சிக்காத விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது (Stealth technology). அது போக, வெனிசுவேலா நாட்டில் உள்ள முக்கிய சில ராணுவத் தளங்களை அமெரிக்க விமானங்கள் தாக்கி அழிக்க, ஏதோ சாதாரணத் தாக்குதல்தான் நடக்கிறது என்று வெனிசுவேலா ராணுவம் எண்ணிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஓசைப்படாமல்...
ஹெலியில் வந்து இறங்கிய Navy SEAL படைகள், சட்டென மின்னல் வேகத்தில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியே கொண்டு வந்து ஹெலியில் போட்டுக்கொண்டு அமெரிக்கா வந்துவிட்டார்கள். அதிபர் மாளிகைக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று ராணுவத்தினர் அறிய முன்னரே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியான திட்டத்தை அமெரிக்க உளவுத்துறை (CIA) வகுத்துள்ளது. தற்போது ஈரானுக்கு வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருக்கும். எந்நேரமானாலும் ஈரானிய உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியை அமெரிக்கா இப்படித் தூக்க முடியும்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதனை, அமெரிக்காவின் மிக நேசமான நாடான பிரிட்டனுக்குக் கூட சி.ஐ.ஏ. அறிவிக்கவில்லையாம். இதனால் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) பெரும் அதிர்ச்சியில் உள்ளதோடு, இதற்கும் எமக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று சற்று முன் தெரிவித்துள்ளார். இதே பாணியில் தான் பின் லேடனையும் Navy SEAL படை பாகிஸ்தானில் வைத்துத் தூக்கியது. இனி அமெரிக்காவை எதிர்க்கும் சகல நாட்டுத் தலைவர்களும் தமது மாளிகையில் தூங்க முடியாது போல் இருக்கிறதே!
