மோடி அங்கே வந்தவேளை, சிவகார்த்திகேயனை விட மோடியே மிகவும் உணர்ச்சிபூர்வமாக சிரித்தார். அப்படி அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை ? . ஆனால் நிச்சயம், சிவகார்த்திகேயனை பிடித்து இருக்கும். காரணம் பராசக்த்தி படத்தின் மூலமாக தமிழக காங்கிரஸை காலி செய்துள்ளது தான் !
பராசக்தி படத்தில் நடித்து, அதில் இந்தி எதிர்ப்பு அரசியலைப் புகுத்தி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி மொழி தமிழ்நாட்டில் எவ்வாறெல்லாம் திணிக்கப்பட்டது என்பதைக் காட்டி, அக் கட்சியின் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. இந்தப் படத்தின் விநியோகத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் (Red Giant Movies) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அதன் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுக தலைவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசியல் சூழலில், நடிகர் சிவகார்த்திகேயன் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இவ்விழாவில் தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், மோகன் ரவி (ஜெயம் ரவி) மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயனிடம், "விஜய் ரசிகர்கள் உங்கள் படத்தின் மீது எதிர்மறையான கருத்துகளைப் பரப்புகிறார்களா?" என வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இல்லை, ஒரு சில ரசிகர்கள் அவ்வாறு பேசலாம். ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
ஒட்டுமொத்த ரசிகர்களையும் அப்படிச் சொல்ல முடியாது. நாங்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருக்கிறோம், அது அப்படியே தொடரும்" என்றார். இருப்பினும், மோடி பங்கேற்ற அந்த விழாவில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர் விரிவாகப் பேசவில்லை. பிரதமர் பங்கேற்கும் அரசு/கட்சி சார்ந்த விழாவிற்கு சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
