"நண்பேன்டா" என்று முழங்கிய 300 ஆண்டுகால நட்பை, ஒரே ஒரு அறிவிப்பால் குப்பையில் வீசியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்க பிரிட்டன் தடையாக இருப்பதாகக் கூறி, பிரிட்டன் மீது 10% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் போட்ட மிரட்டல், ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி எப்போதும் அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டி வந்த பிரிட்டன், இப்போது வேறு வழியே இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் பக்கம் சாய்ந்துவிட்டது.
இவ்வளவு நாள் அமைதியாக இருந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், இப்போது தனது பொறுமையை முற்றாக இழந்து ட்ரம்ப்பை வெளுத்து வாங்கி வருகிறார். "நீங்க பண்றதுல ஒரு நியாயமும் இல்லை பாஸ்" நீங்கள் எடுப்பது ரெம்பவே Dangerous Move என்று அவர் காட்டிய அதிரடியில் வெள்ளை மாளிகை அதிகாரிகளே அரண்டு போயுள்ளனர். உலகிலேயே சக்திவாய்ந்த கப்பற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட, அதிலும் அமெரிக்காவின் உற்ற நண்பனான பிரிட்டனை, ட்ரம்ப் ஏன் இப்படிப் பகைக்கிறார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
நேட்டோ (NATO) நாடுகளிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகப் பலம் வாய்ந்தது பிரிட்டன் தான். ஐரோப்பாவின் முக்கிய உளவுத் தகவல்களை அமெரிக்காவுக்குக் கைமாற்றுவதும் பிரிட்டன் தான். இப்படிப்பட்ட "உயிருக்கு உயிரான" நண்பர்களே இப்போது அடித்துக் கொள்வதைப் பார்த்து சீனாவும் ரஷ்யாவும் சைடில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றன. நண்பர்கள் மோதிக்கொண்டால் எதிரிக்குக் கொண்டாட்டம் என்பது போல சர்வதேச அரசியலே இப்போ ரணகளமாகிவிட்டது.
டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்தை எப்படியாவது அமுக்கிவிட வேண்டும் என்று ட்ரம்ப் ஒரு பக்கம் கையில் வேப்பிலை கட்டி கரகம் ஆடி நிற்க, அதற்குப் போட்டியாகப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் படைகளைக் கிரீன்லாந்துக்கு அனுப்பிப் பாதுகாப்பு கொடுத்துள்ளன. ரஷ்யாவை எதிர்க்க வேண்டிய நேரத்தில், அமெரிக்காவை எதிர்க்க வேண்டிய சூழல் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், கிரீன்லாந்தில் உள்ள அரிய வகை கனிமங்கள் மீது ட்ரம்ப் வைத்துள்ள ஆசைதான் என்று ஊரே பேசுகிறது.
சீனாவுடன் ட்ரம்ப் மல்லுக்கட்டியதால், மைக்ரோ சிப்(micro chip) தயாரிக்கத் தேவையான கனிமங்களை சீனா அமெரிக்காவுக்கு அனுப்பவில்லை.. இந்த இழப்பை ஈடுகட்டவே கிரீன்லாந்தை வளைக்க ட்ரம்ப் இப்படி ஒரு 'வில்லத்தனமான' வேலையில் இறங்கியுள்ளார். நேட்டோ நாடுகளுக்குள் இருந்துகொண்டே அமெரிக்காவே இப்படிச் செய்வது, "நண்பனின் மனைவி மீது கை வைக்கும்" ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. ட்ரம்ப்பின் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 3 வருஷம் இருக்கு.. அதுவரைக்கும் உலகத்துக்குப் பெரிய சோதனைதான் போல!
