Meet the world's smartest COW: பசுக்களுக்கு அறிவுத் திறன் குறைவு என்று நினைப்பவர்களுக்கு ஆஸ்திரியா நாட்டுப் பசு ஒன்று செம 'ஷாப்' கொடுத்திருக்கிறது. கிரிந்தியா (Carinthia) கிராமத்தைச் சேர்ந்த 'வெரோனிகா' என்ற சுவிஸ் வகை பசு, ஒரு மரக்கட்டையைத் தனது வாயால் கவ்வி, லாவகமாக முதுகைச் சொறிந்து கொள்வதை விஞ்ஞானிகள் முதன்முதலாகக் கண்டறிந்துள்ளனர். விலங்குகள் தங்களுக்குத் தேவையான ஒரு வேலையைச் செய்ய, ஒரு கருவியை (Tool use) எப்படிப் பயன்படுத்துவது என்று யோசிப்பது மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பசுவின் அறிவாற்றல் இப்போது உலக அளவில் Viral ஆகி வருகிறது.
விட்கார் வீகல் என்ற விவசாயி, வெரோனிகாவை கடந்த பத்து வருடங்களாக ஒரு செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். தொடக்கத்தில் மரக்கட்டைகளுடன் விளையாட ஆரம்பித்த இந்தப் பசு, பிறகு மெல்ல மெல்ல அதைக் கொண்டு தன் முதுகைச் சொறியக் கற்றுக்கொண்டதைக் கண்டு அவர் வியந்து போயுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன் எஜமானர் குடும்பத்தாரின் குரலைத் துல்லியமாக அடையாளம் காணும் வெரோனிகா, அவர்கள் அழைத்தவுடனேயே ஓடி வந்து அன்பை வெளிப்படுத்துமாம். "விலங்குகளிடமிருந்து நாம் பொறுமையையும், அமைதியையும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் அதன் உரிமையாளர்.
வியன்னா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவாற்றல் உயிரியலாளர் (Cognitive biologist) டாக்டர் ஆலிஸ் அவுர்ஸ்பெர்க், இந்தச் சம்பவத்தை நேரில் ஆய்வு செய்துள்ளார். பசுவின் இந்தச் செயல் ஏதோ தற்செயலாக நடந்தது அல்ல என்றும், அது மிகவும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான வேலை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை Current Biology இதழில் ஜனவரி 19 அன்று வெளியாகி, கால்நடைகளின் மூளைத் திறன் குறித்த பழைய எண்ணங்களை மாற்றியமைத்துள்ளது.
ஆராய்ச்சியின் போது, தரையில் வெவ்வேறு திசைகளில் வைக்கப்பட்ட பிரஷ்களை (Deck brush) வெரோனிகா எப்படிப் பயன்படுத்துகிறது என்று சோதிக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, அந்தப் பசு ஒவ்வொரு முறையும் தன் உடலின் எந்தப் பகுதியைச் சொறிய வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு பிரஷின் நுனியைத் தேர்ந்தெடுத்து மிகச் சரியாகப் பயன்படுத்தியது. "பசுக்களுக்கு இவ்வளவு பெரிய சிந்தனைத் திறன் இருக்குமா?" என வியக்கும் விஞ்ஞானிகள், இது கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகின்றனர்.
