வெளியாகியுள்ள மின்னஞ்சல்களின்படி, பென்டகனுக்கு அருகிலுள்ள 9 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்ட வளாகத்தை வாங்குவதற்கு எப்ஸ்டீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் ஒருவேளை முடிந்திருந்தால், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனுக்கே எப்ஸ்டீன் ஒரு 'வீட்டு உரிமையாளர்' (Landlord) ஆகியிருப்பார். இதேபோல், 2015-ம் ஆண்டில் ரிச்மண்ட் மற்றும் பால்டிமோர் பகுதிகளில் உள்ள FBI அலுவலகங்களை வாங்கும் திட்டமும் அவருக்கு முன்வைக்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தத் திட்டங்களை டேவிட் ஸ்டெர்ன் (David Stern) என்ற தொழிலதிபர் எப்ஸ்டீனுக்கு முன்னெடுத்துள்ளார். அவர் தன்னை எப்ஸ்டீனின் 'சிப்பாய்' (Soldier) என்று அழைத்துக்கொண்டதுடன், பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்ஸ்டீனை ஒரு 'மொசாட் உளவாளி' (Mossad Agent) என சில FBI குறிப்புகள் விவரித்துள்ள நிலையில், அவர் அமெரிக்காவின் மிக முக்கியமான அரசு அலுவலகங்களைச் சொந்தமாக்க முயன்றது தேசிய பாதுகாப்புக்கே விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் எதுவும் இறுதியாக நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ஒரு கொடூரமான பாலியல் குற்றவாளியால் அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலகங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு நெருங்க முடிந்ததே இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பணபலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்ற போக்கிற்கு இது ஒரு சாட்சி எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
