வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, புவேர்ட்டோ வல்லார்ட்டா மற்றும் குவாடலஜாரா சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர்கள் புகுந்ததாக வெளியான தகவல்களால், பயணிகள் உயிருக்குப் பயந்து ஓடுபாதைகளில் (Tarmac) சிதறி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் கனேடியச் சுற்றுலாப் பயணிகள் தங்களது நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் விமான நிலையங்களிலும், தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் முடங்கியுள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, ஜாலிஸ்கோ மாகாண ஆளுநர் 'கோட் ரெட்' (Code Red) எனப்படும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல்கள் ராணுவத்துடன் நேரடியாகத் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால், மெக்சிகோவின் 19 மாகாணங்களில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் 'ரிசார்ட்' பகுதிகளில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
\மெக்சிகோவில் சிக்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளைப் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. "பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுங்கள்; தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏர் கனடா மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் மெக்சிகோவிற்கான தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன. அமைதி திரும்பும் வரை மெக்சிகோவிற்குச் சுற்றுலாச் செல்வதைத் தவிர்க்குமாறு உலக நாடுகளின் தூதரகங்கள் தங்களது குடிமக்களை எச்சரித்துள்ளன.
