முடிஞ்சா தனி கட்சி தொடங்கி 1% வாக்கு வாங்கிப் பாருங்கள்- வாரிசுகளுக்கு விஜய் விடுத்த சவால் !


சேலத்தில் இன்று (பிப்ரவரி 13, 2026) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தனது அரசியல் அனுபவம் குறித்து விமர்சிப்பவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். "அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்பவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர வேறு என்ன அனுபவத்தை வைத்திருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்பவர்கள், தன்னைப்போல எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு தனிக் கட்சி தொடங்கி, குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளையாவது வாங்க முடியுமா? என்று சவால் விடுத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக விமர்சித்த விஜய், "ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு, இப்போது 'உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள்' என்று முதல்வர் கேட்கிறார். மக்களின் கனவு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார். கடந்த தேர்தல்களில் திமுக-விற்கு மக்கள் வாக்களித்தது ஒரு நம்பிக்கையில்தான் என்றும், ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடப்பதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தற்போது மக்களின் உண்மையான கனவாக உள்ளது என்றும் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

பழைய கட்சிகள் மீதான விமர்சனம்: சுமார் 50 மற்றும் 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கட்சிகள் இன்றும் கூட்டணிக்காகக் காத்துக்கிடப்பதாக விஜய் விமர்சித்தார். "கட்சியைத் தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை மறந்ததுதான் உங்கள் அனுபவமா?" என்று கேட்ட அவர், கொள்ளையடிப்பதில் தமக்கு அனுபவம் இல்லை என்றும், அது தமக்குச் சுட்டுப்போட்டாலும் வராது என்றும் ஆவேசமாகப் பேசினார். தவெக இன்று 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்று முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தவெக யாருடைய வாக்குகளையும் பிரிக்கவோ அல்லது யாரையும் அழிக்கவோ வரவில்லை என்று குறிப்பிட்ட விஜய், கட்சியின் எதிரிகள் யார் என்பதை ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துவிட்டதாகக் கூறினார். மக்களின் நலனுக்காக அந்த எதிரிகளை வீழ்த்துவதே தனது லட்சியம் என்றும், அதற்கான பாதையில் தொண்டர்கள் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சேலத்தில் சுமார் 5,000 நிர்வாகிகள் பங்கேற்ற இந்தச் சந்திப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக-வின் முக்கியப் பிரச்சாரக் களமாகப் பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Contact Form